சிங்கப்பூரில் விதிமுறைகளைமீறி சாலையைக் கடக்கும் மூத்தோர் தொடர்புடைய விபத்துகள் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு, சட்டவிரோதமான முறையில் சாலையைக் கடந்த மூத்தோர் தொடர்பில் 101 விபத்துகள் ஏற்பட்டன. 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 95ஆக இருந்தது.
கடந்த ஆண்டு அத்தகைய விபத்துகளில் 15 மரணங்கள் பதிவாகின. 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட ஏழு மரணங்களைவிட அது ஒரு மடங்கு அதிகம்.
ஒட்டுமொத்தமாக சாலை விபத்துகளில் உயிரிழந்த மூத்தோரின் எண்ணிக்கையும் 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு அதிகரித்தது.
2025ஆம் ஆண்டு 27 மரணங்கள் பதிவாகின. 2024ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 11ஆக இருந்தது. மாண்ட மூத்தோர் அனைவரும் பாதசாரிகள்.
50 மீட்டர் தொலைவில் உள்ள பாதசாரிகளுக்கான பாதையைப் பயன்படுத்தாமல் சாலையைக் கடப்பது, மேம்பாலம் அல்லது நிலத்தடி பாதைகளைப் பயன்படுத்தாதது, போக்குவரத்துச் சமிக்ஞைகளைப் புறக்கணிப்பது, சாலையைக் கடக்க தடுப்புகளைத் தாண்டுவது ஆகியவை விதிமுறைகளைமீறும் செயல்கள் என்று காவல்துறை சனிக்கிழமை (ஜூன் 6) தெரிவித்தது.
நொவினா போன்ற பகுதிகளில் ஒவ்வோர் அரை மணிநேரத்துக்கும் குறைந்தது 22 மூத்தோர் சட்டவிரோதமான முறையில் சாலையைக் கடந்தது கண்டறியப்பட்டது. சிராங்கூன் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 20 மூத்தோரும் ஈசூன், ஜுரோங் ஈஸ்ட் ஆகியவற்றில் மூத்தோர் மூவரும் சட்டவிரோதமான முறையில் சாலையைக் கடந்தனர்.
அவர்களில் பலர் ‘பாதுகாப்பான’ வகையில் சட்டத்தைமீறி சாலையைக் கடப்பதாகத் தெரிவித்தனர். தங்கள்மீது மோதாமல் வாகனத்தை ஓட்டும் பொறுப்பு வாகனவோட்டிகளுக்கும் இருக்கிறது என்று மூத்தோர் ஒருவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாகனங்களின் வேகத்தைக் கணிக்க முடிவதால் அதற்கேற்றவாறு சாலையைக் கடப்பதாக வேறு சிலர் கூறினர்.
கடந்த ஆண்டு 1,412 பேர் சட்டவிரோதமான முறையில் சாலையைக் கடந்ததற்காகப் பிடிபட்டனர். 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,591ஆக இருந்தது.
2021ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1,000 பேர் விதிமுறைகளைப் பின்பற்றாமல் சாலையைக் கடந்ததற்காகப் பிடிபட்டனர்.

