ஆண்டின் முற்பாதியில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆண்டின் முற்பாதியில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
இணையக் குற்றங்கள் அல்லாத ஒட்டுமொத்தக் குற்றச்செயல்கள் குறைந்தன
0eefe4ec-16e7-42fb-9e76-2fb88fcbb42c
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 762 மானபங்கச் சம்பவங்கள் பதிவாகின. 2025ஆம் ஆண்டு முற்பாதியில் அந்த எண்ணிக்கை 739ஆக இருந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முற்பாதியில் பாலியல் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) வெளியிட்ட அரையாண்டுக் குற்றச்செயல் தகவலறிக்கையில் மானபங்கக் குற்றங்கள், கடைத் திருட்டு, வீடு புகுந்து திருடுதல் போன்றவை கவலையளிக்கக்கூடிய வகையில் பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக அது கூறியது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 762 மானபங்கச் சம்பவங்கள் பதிவாகின. 2025ஆம் ஆண்டு முற்பாதியில் அந்த எண்ணிக்கை 739ஆக இருந்தது. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் 230லிருந்து 261ஆக அதிகரித்தன. பெரும்பாலான சம்பவங்கள் குடியிருப்புப் பகுதிகள், பொதுப் போக்குவரத்து, கேளிக்கைத் தலங்களில் நடந்துள்ளன.

அதேநேரத்தில், சென்ற ஆண்டின் முற்பாதியில் 10,325ஆக இருந்த ஒட்டுமொத்தக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை (இணையக் குற்றங்கள் அல்லாதவை), 2026 முற்பாதியில் 10,287ஆகக் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 27ஆம் தேதி பொதுப் பேருந்தில் இளம்பெண் ஒருவரிடம் தகாதமுறையில் நடந்துகொண்ட முதியவரைத் தட்டிக்கேட்டதுடன் காவல்துறைக்குத் தகவல் அளித்த 55 வயது ஓவ் சியாவ் யாமிற்கு ‘சேஃபர்எஸ்ஜி பொதுநலச் செயலுக்கான விருது (SaferSG Public Spiritedness Award) வழங்கப்பட்டது.

தேக்கா பிளேசில் பாதுகாப்புக் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் 51 வயது விக்னேஸ்வரி கிருஷ்ணனும் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி, மது அருந்திவிட்டு மின்படிக்கட்டில் பெண் ஒருவரிடம் தகாதமுறையில் நடந்துகொண்ட சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகாரளிக்க அவர் உதவினார்.

குற்றங்களைத் தடுக்கப் பொதுமக்கள் உதவ முன்வரவேண்டும் என்று அவ்விருவரும் வலியுறுத்தினர்.

பாலியல் குற்றங்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் இடையிலான உறவு எத்தகையதாக இருந்தாலும், குற்றச்செயல்களைத் தீவிரமாகக் கருதுவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 762 மானபங்கச் சம்பவங்கள் பதிவாகின. 2025ஆம் ஆண்டு முற்பாதியில் அந்த எண்ணிக்கை 739ஆக இருந்தது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 762 மானபங்கச் சம்பவங்கள் பதிவாகின. 2025ஆம் ஆண்டு முற்பாதியில் அந்த எண்ணிக்கை 739ஆக இருந்தது. - தகவல்: சிங்கப்பூர் காவல்துறை,  வரைகலை: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழாக்கம்: தமிழ் முரசு

இதர குற்றங்கள்

இவ்வேளையில், கத்தி பயன்படுத்தப்பட்ட குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 2026 முற்பாதியில் 68ஆகப் பதிவானது. 2025 முற்பாதியில் அது 1ஆக இருந்தது. கொலைச் சம்பவங்களில் எண்ணிக்கையில் மாற்றமில்லை. இரு ஆண்டுகளின் முற்பாதியிலும் இரண்டு கொலைகள் பதிவாயின என்று காவல்துறை குறிப்பிட்டது.

கடைகளில் திருட்டு 2,095ஆகவும், வீடு புகுந்து திருடிய சம்பவங்கள் 64ஆகவும் உயர்ந்துள்ளன. கடைத் திருட்டைக் கட்டுப்படுத்த ஷெங் சியோங், வாட்சன்ஸ் போன்ற நிறுவனங்கள் முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் 730ஆக அதிகரித்துள்ளதால், பொது இடங்களில் பொருள்களை விட்டுச் செல்ல வேண்டாம் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்