ஜோகூரில் உள்ள பள்ளிகளில் சிங்கப்பூரிலிருந்து சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவிக்கிறது.
மலேசிய கல்வி அமைச்சின் இணையத்தளத்தை அந்தச் செய்தி நிறுவனம் பார்வையிட்டதில் தற்போது ஜோகூரில் 29 அனைத்துலகப் பள்ளிகள் இருப்பதைக் கவனித்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு அத்தகையப் பள்ளிகளின் எண்ணிக்கை 23 ஆக இருந்தது.
அதேபோல, அனைத்துலகப் பள்ளிகளில் சேரும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மால்பரோ காலேஜ் மலேசியா, ஸ்டெல்லார் இண்டர்நேஷனல் ஸ்கூல், ராஃபிள்ஸ் அமெரிக்கன் ஸ்கூல், பாரகன் பிரைவேட் அண்ட் இண்டர்நேஷனல் ஸ்கூல், சன்வே இண்டர்நேஷனல் ஸ்கூல் சன்வே சிட்டி இஸ்கந்தர் புத்திரி போன்றவை ஜோகூர் மாநில அனைத்துலகப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்கவை.
ஜோகூரில் சிறப்புப் பொருளியல் மண்டலமும் சிறப்பு நிதி மண்டலமும் ஆண்டிறுதியில் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த மண்டலகங்கள் உருவான பின்னர் அனைத்துலகப் பள்ளிகளின் எண்ணிக்கையும் சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் சென்று படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இணையச் செய்தி குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதை ஜோகூரில் உள்ள பல்வேறு அனைத்துலகப் பள்ளிகள் கவனித்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
உதாரணத்திற்கு, ஸ்டெல்லார் அனைத்துலகப் பள்ளியில் 614 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கொரியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
“சிங்கப்பூரர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாடுகளின் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு, சிங்கப்பூர் கல்விமுறையைத் தவிர்க்க விரும்புவது ஒரு காரணமாக இருக்கலாம்,” என்று ஸ்டெல்லார் கல்விக் குழுமத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேனியல் லோ கூறினார்.
உள்ளூர் மாணவர்கள் மற்றும் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரம் 60:40 என்பதை அனைத்துலகப் பள்ளிகள் கடைப்பிடிக்கின்றன.