சிங்கப்பூரில் புத்தகங்களைப் படிப்பதற்காகப் பொது நூலகங்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய நூலகம் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு நூலகங்களில் இருந்து புத்தகங்களை இரவல் பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்ததாக அது கூறியுள்ளது.
2024ஆம் ஆண்டு பொது நூலகங்களுக்கு 38.8 மில்லியன் பேர் வருகை அளித்ததாகவும் அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 2.5 மில்லியன் அதிகரித்திருப்பதாகவும் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 4) வாரியம் வெளியிட்ட ஆண்டு மீள்பார்வை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1.39 மில்லியன் வருகையாளர்களுடன் உட்லண்ட்ஸ் வட்டார நூலகம் முதலிடத்தில் உள்ளது.
2023ஆம் ஆண்டு அதிக வருகையாளர்களை ஈர்த்த பொது நூலகப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பொங்கோல் வட்டார நூலகத்தைப் பின்னுக்குத் தள்ளி அவ்விடத்தை 2024ஆம் ஆண்டு உட்லண்ட்ஸ் வட்டார நூலகம் கைப்பற்றியது.
ஒட்டுமொத்தமாக, தேசிய நூலக வாரியத்தின் 28 நூலகங்கள், சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம், முன்னாள் ஃபோர்டு தொழிற்சாலை உள்ளிட்டவற்றிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு 19.8 மில்லியனாக இருந்தது.
அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு 20.8 மில்லியனாக உயர்ந்துள்ளது.
நூலகங்களுக்கு வருகைபுரிந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், தேசிய நூலக வாரியத்தின் இணையப் பக்கத்தைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையும் மின்னூல்கள், தரவுகளைப் பயன்படுத்த சந்தா பெற்றவர்களின் எண்ணிக்கையும் 2023ஆம் ஆண்டின் 121.2 மில்லியனுடன் ஒப்பிடும்போது கால்பங்கிற்கும் மேலாகக் குறைந்து 2024ஆம் ஆண்டு 89.2 மில்லியனாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் வாசிப்பு, கற்றல் பழக்கத்தை மேம்படுத்தவும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அறியவும் தேசிய நூலக வாரியத்தை நம்பகமான கூட்டாளியாக எண்ணியதற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்,” என வாரியத்தின் தலைமை நிர்வாகி இங் செர் போங் தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டு ஜூன் மாதம் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளுடன் வாரியம் அதன் 30வது ஆண்டு விழாவைக் கொண்டாடவிருப்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் உள்ளோருக்கு வாசிப்பு, கற்றல்மீதான ஆர்வம் போன்றவற்றைத் தூண்ட அதுபோன்ற நிகழ்ச்சிகள் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றார் திரு போங்.

