நிர்வாக வாரியங்களில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நிர்வாக வாரியங்களில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
377d6138-c13f-479c-9324-9be47f313df9
நிர்வாக வாரியங்களில் பெண் இயக்குநர்களின் விகிதத்தை 2030க்குள் 30 விழுக்காட்டுக்கு உயர்த்துவதே இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரில் நிறுவனங்களின் நிர்வாக வாரியங்களின் தலைமைத்துவப் பொறுப்புகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நிர்வாக வாரியங்களில் பன்முகத்தன்மை அதிகரித்துவருவதை அது காட்டுகிறது. வாரியப் பன்முகத்தன்மைக்கான மன்றம் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் அது தெரியவந்தது.

புள்ளிவிவரங்களின்படி, பொதுத் துறையின் வாரியங்களில் 36.1 விழுக்காட்டு இடங்களைப் பெண்கள் வகிக்கின்றனர். லாப நோக்கமற்ற பொதுநல அமைப்புகளின் வாரியங்களில் 35.6 விழுக்காட்டினர் பெண்கள். சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள முதல் 100 நிறுவனங்களின் வாரியங்களில் அவர்களின் விகிதம் 25.8 விழுக்காடு.

2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிர்வாக வாரியங்களில் இடம்பெற்றுள்ள பெண்களின் விகிதம் 18 விழுக்காட்டுப் புள்ளி கூடியுள்ளது. சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள முதல் 100 நிறுவனங்களின் வாரியங்களில் பெண்கள் தலைவர்களாக இருக்கும் விகிதம் 2024ஆம் ஆண்டு எட்டு விழுக்காடாக இருந்தது. அது சென்ற ஆண்டு (2025), 10 விழுக்காட்டுக்குக் கூடியது.

“வாரியத்தின் செயல்முறைகள், முடிவெடுத்தல், நிர்வாக விளைவுகள் முதலியவற்றை வடிவமைக்கும் தலைமைத்துவப் பொறுப்புகளில் கூடுதலான பெண்கள் இருப்பது பிரதிநிதித்துவத்திற்கு அப்பால் அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது,” என்று மன்றம் குறிப்பிட்டது. நிர்வாக வாரியங்களில் பெண் இயக்குநர்களின் விகிதத்தை 2030க்குள் 30 விழுக்காட்டுக்கு உயர்த்துவதே இலக்கு என்று அது தெரிவித்தது.

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள், அரசாங்க ஆணை பெற்ற கழகங்கள், லாப நோக்கமற்ற பொதுநல அமைப்புகள் என 1,300க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தரவுகள் மன்றத்தின் புள்ளிவிவரங்களில் அடங்கியுள்ளன.

மன்றத்தின் தரவுகளுடன் மற்றோர் ஆய்வும் நடத்தப்பட்டது.

பன்முகத்தன்மைக்கான வாரியம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் நோக்கம் குறித்த ஆய்வு, தலைமைத்துவ ஆலோசனை நிறுவனமான ஈகோன் ஸெண்டருடன் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் 170 நிறுவன இயக்குநர்கள் பங்கேற்றனர்.

வாரியங்களில் பன்முகத்தன்மையை அதிகரிப்பது முக்கியம் என்று ஆய்வு குறிப்பிட்டது. ஆயினும் தொழில்முறைத் தரநிலைகளுக்குக் கட்டுப்படுவதற்காக மட்டும் பன்முகத்தன்மையைப் பின்பற்றாமல், அதனால் ஏற்படும் நன்மைகளை முழுமையாக நம்பிச் செயல்படுவது அவசியம் என்றும் ஆய்வு சுட்டியது.

குறிப்புச் சொற்கள்