சிறப்புத் தேவையுடைய உடன்பிறப்புகளைப் பராமரிக்கும் இளையர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறப்புத் தேவையுடைய உடன்பிறப்புகளைப் பராமரிக்கும் இளையர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
ed650dd5-0e44-40ea-b57f-3947d062caa4
‘ஆட்டிசம்’ எனும் தொடர்புத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 22 வயது மோரி அயானோ ஜஸ்டினை (வலது) அவரது 17 வயது தங்கை மோரி சவாகோ ஈஃப்லின் பார்த்துக்கொள்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சிறப்புத் தேவையுடைய உடன்பிறப்புகளைப் பராமரிக்கும் இளையர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.

அத்தகைய இளையர்களுக்கு ஆதரவு வழங்கும் ‘மைன்ட்சிப்ஸ்’ (MINDSibs) என்ற திட்டத்தில் இணையும் இளையர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு, ‘மைன்ட்சிப்ஸ்’ திட்டத்தில் 35 வயதுக்கும்கீழ் உள்ளோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 160ஆக இருந்தது. தற்போது அது, 320க்குமேல் அதிகரித்துள்ளது.

‘மைன்ட்ஸ்’ என்ற அமைப்பின்கீழ் ‘மைன்ட்சிப்ஸ்’ திட்டம் செயல்படுகிறது.

“சிங்கப்பூரில் கருவள விகிதம் குறைந்து வருவதுடன் கூடுதலான சிறப்புத் தேவையுடையோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அப்படியென்றால், பராமரிப்பாளர்களுக்கான பொறுப்புகளை எதிர்காலத்தில் பார்த்துக்கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும்,” என்றார் மைன்ட்ஸ் அமைப்பில் மூத்த சமூக ஊழியராகச் சேவையாற்றும் திருவாட்டி ‌‌ஷைன் கோ.

சிறப்புத் தேவையுடைய உடன்பிறப்புகளுக்குப் பராமரிப்பாளர்களாக இருக்கும் இளையர்களுக்காக 2010ஆம் ஆண்டு ‘மைன்ட்சிப்’ திட்டம் தொடங்கப்பட்டது.

அந்தத் திட்டம் மூலம் முகாம்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு தங்கள் உடன்பிறப்புகளுக்கு இருக்கும் நிலை குறித்து இளையர்கள் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்வதுடன் தங்களைப் போன்ற நிலையில் உள்ள பிற இளையர்களின் அனுபவத்தையும் தெரிந்துகொள்கின்றனர்.

சிறப்புத் தேவையுடைய உடன்பிறப்புகளைப் பார்த்துக்கொள்ளும் இளையர்கள் பெற்றோரின் சுமையை அதிகரிக்கக்கூடாது என்பதற்காக தங்கள் சிரமங்களை வெளிக்காட்டுவதில்லை என்றார் திருவாட்டி கோ.

ஒருசில இளையர்கள் சிறப்புத் தேவையுடைய உடன்பிறப்புகளுக்கு முதன்மை பராமரிப்பாளர்களாக இருப்பதில்லை. அவர்கள் உடன்பிறப்புகளின் அன்றாடத் தேவைகளைப் பார்த்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் அவற்றைப் பெற்றோரே பார்த்துக்கொள்கின்றனர்.

அத்தகைய சூழலில் உள்ள இளையர்கள் மன ரீதியான ஆதரவை வழங்குகின்றனர்.

குறிப்புச் சொற்கள்