2025ல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

2025ல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Nov 2026 - 11:39 am

2 mins read

குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட பத்து முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு உயர்ந்து ஐந்தாண்டு உச்சத்தை எட்டியுள்ளது.

2024ஆம் ஆண்டு 662ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 792ஆக அதிகரித்ததாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 657ஆக இருந்தது.

செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான இளையர் மறுவாழ்வுப் போக்கு ஆதரவு அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் மொத்தம் 3,117 இளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்வரில் ஒருவர் பெண்ணாவார். ஆண்களின் குற்ற விகிதம் ஆயிரத்திற்கு 8.1ஆக இருக்க, பெண்களின் விகிதம் மூன்றாகப் பதிவானது.

இளம்பெண்கள் புரிந்த குற்றங்களில் மோசடி முதலிடத்தில் உள்ளது. மோசடிக்காரர்களுக்கு வங்கிக் கணக்குகள், சிங்பாஸ் விவரங்கள், சிம் அட்டைகள் ஆகியவற்றை வழங்கி அவர்கள் உடந்தையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

அடுத்தபடியாகத் திருட்டுக் குற்றங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. உணவு, மதுபானம், அழகுசாதனப் பொருள்கள், மின்னணுச் சாதனங்கள் அதிகம் திருடப்பட்டுள்ளன. தேவைகள், தூண்டுதல்கள், சக நண்பர்களின் தாக்கத்தால் திருட்டுகள் நடக்கின்றன.

போதைப்பொருள், பாலியல் குற்றங்கள் ஆகியவற்றிலும் இளம்பெண்கள் ஈடுபட்டனர்.

குடும்பப் பூசல்கள் அல்லது மனவுளைச்சல் கொண்ட இளம்பெண்கள், நண்பர்கள் அல்லது காதலர்களின் வற்புறுத்தலுக்கு மறுப்புத் தெரிவிக்க முடியாமலும் குழுவுடன் ஒன்றிப்போகவும் குற்றங்களில் ஈடுபடுவதாக அமைச்சின் மூத்த உதவி இயக்குநர் மிஷெல் லீ கூறினார்.

ஆரோக்கியமற்ற உறவுகளை அடையாளம் காணவும் சுயமரியாதையை வளர்க்கவும் குடும்பத்தினருடன் இணைந்து அமைச்சின் அதிகாரிகள் இளம்பெண்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.

தனிமையால் இணையத்தில் நண்பர்களைத் தேடிய 16 வயது சீ சுவான், வீட்டைவிட்டு வெளியேறித் திருட்டு, புகைபிடித்தல், மது அருந்துதல், மின்சிகரெட் பழக்கம் ஆகியவற்றிற்கு அடிமையானதாக அவர் தெரிவித்தார்.

சீயின் முன்னாள் காதலர் ‘கேபாட்ஸ்’ எனும் போதை மின்சிகரெட்டை அவருக்கு அறிமுகப்படுத்தியதாகவும் கலவரம் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் திருவாட்டி மி‌ஷெல் குறிப்பிட்டார்.

சீர்திருத்த உத்தரவின்படி 2025ஆம் ஆண்டில் 21 மாதங்கள் சிங்கப்பூர் மகளிர் இல்லத்தில் பதின்மவயது சீ தங்கவைக்கப்பட்டார்.

அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைக்குப் பின் தன் தவற்றை உணர்ந்த அவர், பெற்றோரே உண்மையான துணை என்பதை நன்கு புரிந்துகொண்டதாக மூத்த உதவி இயக்குநர் மிஷெல் கூறினார்.

குறிப்புச் சொற்கள்