சிங்கப்பூர் இளையர்களிடையே ஆயுதங்களை ஓர் அலங்காரப் பொருளைப் போல வைத்திருக்கும் போக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு ஆயுதங்களுடன் பொது இடங்களில் வலம் வரும் இளையர்கள், காரசாரமான வாக்குவாதத்தின்போது அவற்றைக் காட்டி மிரட்டுவதாக ஆலோசகர்கள் தெரிவித்தனர்.
“ஒருசில ஆயுதங்கள் பார்க்க அழகாக இருப்பதால் இளையர்கள் அவற்றை வாங்கி மற்றவர்களிடம் காட்ட அவற்றை பொது இடங்களில் கொண்டு செல்கின்றனர்,” என்றார் செரிட்டி இம்பார்ட் நிறுவனத்தின் திரு நரசிம்மன் டிவசிஹா மணி.
அத்தகைய ஆயுதங்களில் சிலவற்றை கெரோசல், டெலிகிராம், ஃபேஸ்புக் போன்ற இணையத்தளங்களில் வாங்க முடியும் என்ற அவர், சண்டையின்போது இளையர்கள் அவற்றைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு வன்முறை குற்றங்கள் தொடர்பில் கைதான இளையர்களின் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து திரு மணியின் கருத்து வெளிவந்துள்ளது.
மார்ச் மாதம் மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்துடன் கலவரத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த செப்டம்பரில் கிச்சனர் சாலையில் சண்டையிட்ட 22 வயது ஆடவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. அதே சம்பவத்தில் ஈடுபட்டிருந்த முன்று ஆடவர்கள், இரண்டு பெண்கள் மீதும் மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்தை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 வயது இளையர் 20 வயது ஆடவரை செம்பவாங் வட்டாரத்தில் பாராங் கத்தியால் தாக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆயுதங்களுடன் குற்றம் புரிந்த இளையர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 92ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு 133ஆக உயர்ந்தது என அதிகாரத்துவ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கெரோசல், ஷாப்பி போன்ற இணையத்தளங்களில் கத்திகள் போன்ற ஆயுதங்கள் விற்கப்படுவது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டது. அவற்றில் சில ஆயுதங்கள் நுணுக்கமான வடிவங்களில் இருந்ததோடு அவற்றை எப்படி பயன்படுத்தலாம் போன்ற தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
இணைய விளையாட்டுகளில் வரும் ஆயுதங்களும் இளையர்களின் உண்மை வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆலோசகர்கள் குறிப்பிட்டனர்.