ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட பல்வேறு திட்டங்களில் பங்கேற்றோர் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் அதிகரித்தது.
பணியிடைக்கால ஊழியர்களுக்கு ஆதரவு வழங்க இத்திட்டங்கள் நடத்தப்பட்டன.
2024ஆம் ஆண்டில் இத்தகைய திட்டங்களில் ஏறத்தாழ 550,000 பேர் பங்கேற்றனர்.
ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 520,000 மட்டுமே.
இத்தகவலை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு புதன்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்தது.
பணியிடைக்கால ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவு காரணமாகத் திட்டங்களில் பங்கேற்றோர் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் ஏற்றம் கண்டதாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி டான் கோக் யாம் கூறினார்.
40 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம், $4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புத் தொகை வழங்கப்பட்டது.
அதைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டு வாழ்க்கைத் தொழில் பாதையில் உயரலாம்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிரப்புத்தொகைக்குக் காலாவதி தேதி கிடையாது.
7,000க்கும் மேற்பட்ட பயிற்சிகளில் சேர்ந்து பலனடைய இத்தொகையைப் பயன்படுத்தலாம் .
வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளில் கூடுதல் சிங்கப்பூரர்கள் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
உயர் கல்வி நிலையங்கள், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வாழ்க்கைத் தொழில் மாற்றத் திட்டம் ஆகியவை வழங்கும் பயிற்சித் திட்டங்களும் இதில் அடங்கும்.
இப்பயிற்சித் திட்டங்களில் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 179லிருந்து 239ஆக உயர்ந்தது.
அதிகத் தேவையுள்ள துறைகளில் சேர பணியிடை மாற்ற ஊழியர்களுக்கு இவை உதவியாக உள்ளன.
2024ஆம் ஆண்டில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் திட்டங்களில் பங்கேற்ற 555,000 பேரில் 260,000 சிங்கப்பூரர்கள் தங்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டில் 192,000 சிங்கப்பூரர்கள் மட்டுமே அவ்வாறு செய்ததாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு கூறியது.
பணியிடைக்கால ஊழியர்களுக்கான பணியிடைக்கால ஊழியர்களுக்கு $4,000 நிரப்புத் தொகை வழங்கப்பட்டது.
25 வயது எட்டிய சிங்கப்பூரர்களுக்கு ஆரம்ப வழங்கீட்டுத் தொகையான $500 வழங்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் 25 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கும் அதே ஆண்டில் ஒருமுறை வழங்கீட்டுத் தொகையாக $500 கொடுக்கப்பட்டது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் மூலம் கிடைத்த வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்தியவர்களில் பெரும்பாலானோர் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மின்னிலக்க சந்தைப்படுத்துதல் போன்ற தகவல் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பணியிடைக்கால ஊழியர்களுக்கான நிரப்புத் தொகையை ஏறத்தாழ 28,000 சிங்கப்பூரர்கள் பயன்படுத்தினர்.

