சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடற்பகுதியிலும் மலாக்கா நீரிணையிலும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடற்கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளைகளுக்கு எதிரான ஆசிய வட்டார ஒத்துழைப்பு அமைப்பின் (ReCAAP) தகவல் பகிர்வு மையம் (ISC) இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மலாக்கா நீரிணையிலும் சிங்கப்பூரைச் சுற்றியும் 108 கொள்ளைச் சம்பவங்கள் கப்பல்களில் நடந்துள்ளன. இது 2007ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையிலான 19 ஆண்டுகளில் நடந்துள்ள ஆக அதிக எண்ணிக்கையாகும்.
மேலும் மலாக்கா நீரிணையில் நடந்துள்ள கொள்ளை, 2024ஆம் ஆண்டு நடந்த 62 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 74 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மலாக்கா நீரிணையில் கிழக்கு நோக்கிச் சென்ற கப்பல்களில் நடந்த கொள்ளைகளில் அதிர்ஷ்டவசமாகச் சிப்பந்திகளுக்கு காயம் ஏற்படவில்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்றவையாகவே அதிகம் அமைந்துள்ளன.
கடற்கொள்ளைகள் அதிகரித்திருப்பது, கடல் வர்த்தகத்துக்கு இப்பகுதியில் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்ல வேண்டியதில்லை என்று ஆசிய வட்டார ஒத்துழைப்பு அமைப்பின் நிர்வாக இயக்குநர் விஜே டி. சஃபேகர் கூறினார்.
அதிக அளவில் சிறிய திருட்டுச் சம்பவங்களே நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பாதிக்கும் மேற்பட்ட கொள்ளைகளில், அடையாளம் தெரியாதோர் கப்பல்களில் புகுந்து எதையும் களவாடாமல் சென்றுள்ளனர்.
இயந்திரப் பாகங்கள் 31 விழுக்காடு கொள்ளைகளில் திருடப்பட்டன. ஒரு சில நேரங்களில் சிப்பந்திகளின் ரொக்கமும் கப்பல்களின் தளவாட, உபரிப் பாகங்களும் களவு போயின என்று திரு விஜே கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பெரிய கப்பல்களில் திறந்த வெளியில் மூடப்படாமல் வைக்கப்பட்ட சரக்குகளில் இரவு நேரத்தில்தான் அதிக கொள்ளைகள் நடந்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைப்பில் இருந்து அண்மையில் அமெரிக்கா விலகியுள்ளது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கொள்ளைச் சம்பவங்களின் அதிகரிப்பு பாதுகாப்பு குறித்த சவால்களை அதிகரித்தாலும் இந்தோனீசியாவின் ரியாவ் தீவின் வட்டார காவல்துறையினரின் அண்மைய கைது நடவடிக்கைகள் சிறந்த அரணாக விளங்குகிறது என்றும் அமைப்பு விளக்கியது.

