பள்ளிப் பேருந்துக் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல மாற்றுப் பயண ஏற்பாடுகளைப் பெற்றோர் பலர் நாடுகின்றனர்.
ஒருவழிப் பயணத்துக்காகப் பள்ளிப் பேருந்துக் கட்டணமாக மாதந்தோறும் ஏறத்தாழ $240 வசூலிக்கப்படுகிறது.
அதிலும் வீட்டுக்கும் பள்ளிக்கும் அதிகபட்ச தூரம் 4 கிலோமீட்டராக இருக்க வேண்டும்.
பள்ளியிலிருந்து இதைவிட தூரமாக வசிப்பவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏறத்தாழ 180 தொடக்கப்பள்ளிகளில் 34 தொடக்கப்பள்ளிகள் 2025ஆம் ஆண்டிற்காகப் புதிய பள்ளிப் பேருந்துச் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தத் தகவலை கல்வி அமைச்சு data.gov.sg எனும் அதன் தரவு இணையவாசலில் 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பதிவிட்டது.
ஏலக்குத்தகைக்கான அழைப்பு 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் விடுக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் குறைந்தது பத்து பள்ளிகளில் பள்ளிப் பேருந்துச் சேவைக்கான அதிகபட்சக் கட்டணம் அதிகமாக இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப லைலோ போன்ற தனியார் வாடகை கார் நிறுவனம் வழங்கும் சேவைகளைப் பெற்றோர் சிலர் பயன்படுத்துகின்றனர்.
லைலோவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 60லிருந்து 70 தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் மாணவர்களை வீட்டிலிருந்து பள்ளிக்கும் பள்ளியிலிருந்து வீட்டுக்கும் அனுப்பிவைக்கும் சேவையை வழங்குகின்றனர்.
பயண தூரம், வாகன வகை ஆகியவற்றை பொறுத்து ஒரு வழி பயணத்துக்கு ஒவ்வொரு மாணவருக்கும் தலா $20லிருந்து $50 வரை வசூலிக்கப்படுகிறது.
அருகில் வசிக்கும் மற்ற மாணவர்களும் தனியார் வாடகை கார் சேவையை நாடினால் ஒன்று சேர்ந்து பயணம் செய்யலாம்.
அவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு மாணவருக்குமான கட்டணத் தொகை குறைகிறது.
பயணத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது ஒவ்வொரு மாணவருக்குமான ஒரு வழி பயணக் கட்டணம் $8லிருந்து $15 ஆகிறது.
பயணத்தை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒரு வழி பயணத்துக்கு மாதந்தோறும் $160லிருந்து $300 வரை செலவாகிறது.
பயணப் பாதை, கட்டணம் ஆகியவற்றை லைலோவுடன் உறதி செய்த பிறகு மாதாந்திர கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும்.

