வரி செலுத்தப்படாத பொருள்களைக் கடத்தும் வாகனப் பறிமுதல் அதிகரிப்பு

வரி செலுத்தப்படாத பொருள்களைக் கடத்தும் வாகனப் பறிமுதல் அதிகரிப்பு

1 of 2
படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை
படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

26 May 2026 - 9:08 pm

2 mins read

கடந்த 2025ஆம் ஆண்டில் நிலவழி சோதனைச்சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்ட, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், மதுபானம் போன்றவற்றைக் கடத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டு வாகனங்கள் வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்டவை என்று சிங்கப்பூர் சுங்கத்துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

மொத்தத்தில், சுங்கத்துறை சென்ற ஆண்டு 335 வாகனங்களைப் பறிமுதல் செய்தது. கார்கள், மோட்டார்சைக்கிள்கள், கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

2024ல் 300 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கும் முந்திய ஆண்டில் அந்த எண்ணிக்கை 239ஆகப் பதிவானது.

“வரி செலுத்தப்படாத பொருள்களை எடுத்துச் செல்லும், விநியோகிக்கும் அல்லது சேர்த்துவைக்கும் வாகனங்களை சிங்கப்பூர் சுங்கத்துறை பறிமுதல் செய்யும்.

“அத்தகைய வாகனங்களை சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தடுத்து நிறுத்தினால், அந்த வாகனங்களும் அவற்றில் உள்ள வரி செலுத்தப்படாத பொருள்களும் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்படும்,” என்று சுங்கத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கடல், வான்வழி சிங்கப்பூருக்குக் கடத்தி வரப்படுகின்றன. அதேவேளை, அதிக போக்குவரத்து இருப்பதன் காரணமாகப் பலர் இன்னமும் நிலவழி எல்லைகளில் அவற்றைக் கடத்தி வருகின்றனர் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் 2024ஆம் ஆண்டுக்கான அதன் வருடாந்தர அறிக்கையில் தெரிவித்தது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வரலாறு காணாத அளவில் கிட்டத்தட்ட 589,000 பேர் தரைவழியாகச் சிங்கப்பூருக்கு வந்தனர்.

சோதனைச்சாவடிகளிலும் சிங்கப்பூருக்குள்ளேயும் அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதே அதிக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்குக் காரணம் என்று சுங்கத்துறை பேச்சாளர் குறிப்பிட்டார். அமைப்பின் வருடாந்தர அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு முறியடிக்கப்பட்ட, வரி செலுத்தப்படாத பொருள்களைக் கடத்தும் முயற்சிகள் 30 விழுக்காட்டுக்கும் மேல் அதிகமாகப் பதிவாயின.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சுங்கத்துறைபறிமுதல்சிகரெட்