சிங்கப்பூர் குடும்பங்களின் சொத்துகளும் கடன் வாங்கும் போக்கும் அதிகரிப்பு

சிங்கப்பூர் குடும்பங்களின் சொத்துகளும் கடன் வாங்கும் போக்கும் அதிகரிப்பு

2 mins read
3af8d393-8ec8-4f3f-b719-57b0ff610952
ஒரு சிங்கப்பூர் குடும்பத்திற்கு வீட்டுக் கடனே மிகப்பெரிய கடனாகும். இது மொத்தப் பொறுப்புகளில் குறைந்தது 70 விழுக்காட்டை வகிக்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களின் நிகரச் சொத்து மதிப்பு 6.7 விழுக்காடு உயர்ந்துள்ளதால் கடந்த ஆண்டைக் காட்டிலும் அவர்கள் சிறந்த நிலையில் இருந்தாலும் அவை கடன் வாங்கும் வேகமும் அதிகரித்துள்ளது.

இந்த விவரத்தைத் தெரிவித்துள்ள சிங்கப்பூரின் புள்ளிவிவரத் துறை, குடும்பங்களின் பொருளியல் பொறுப்புகள் ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 8.2 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் தனது ஆக அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இங்குள்ள குடும்பங்கள் கடன் வாங்கும் வேகம் அதிகரித்து வருவது இது தொடர்ச்சியான பத்தாவது காலாண்டு ஆகும்.

அதேவேளை, குடும்பங்களின் நிதிநிலைமையும் குடியிருப்புச் சொத்துகளும் ஆண்டு அடிப்படையில் 6.8 விழுக்காடு கூடியுள்ளன.

ஆயினும், 2025 இறுதிக் காலாண்டில் பதிவான 7.3 விழுக்காடு சொத்துகளின் வளர்ச்சியைக் காட்டிலும் இது குறைவுதான்.

செல்வத்தைத் திரட்டுவதைக் காட்டிலும் வேகமாகக் கடன் வாங்கிக் குவிப்பதில் குடும்பங்கள் அதிகக் கவனம் செலுத்துவதை இது உணர்த்துகிறது.

2025ஆம் ஆண்டின் நாலாம் காலாண்டில் தொடங்கிய இந்த நிலைமை இவ்வாண்டின் முதலாம் காலாண்டு வரை நீடித்ததாக புள்ளிவிவரத் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் குடும்பங்களின் நிகரச் சொத்துகளின் மதிப்பு $3.3 டிரில்லியனுக்கு தொடர்ந்து விரிவடைந்த அதேவேளை கடன்சார்ந்த பொறுப்புகள் $415 பில்லியனுக்கு அதிகரித்தன.

குடும்பங்களின் கடன்களைக் கழித்த பின்னர் வரும் நிகர மதிப்பு அதன் ஆண்டு மொத்த நிகர ஊதியத்தைப்போல் கிட்டத்தட்ட 8.7 மடங்கு என்கிறது அறிக்கை.

பணமாக மாற்ற முடியாத சொத்துகளைத் தவிர்த்து, தனிநபர் செலவிடக்கூடிய வருமானத்தில் நிதிச் சொத்துகளின் விகிதம் 0.5 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்து 557.3 விழுக்காடு ஆனது.

உடனடியாகக் கிடைக்கக்கூடிய வங்கி வைப்புத்தொகைகள் மற்றும் காப்பீடு, பட்டியலிடப்பட்ட பத்திரங்கள் போன்ற எளிதில் பணமாக்க முடியாத பிற சொத்துகளும் நிதிச் சொத்துகளில் அடங்கும். இது முழுமையான பிரதிநிதித்துவம் இல்லை என்றாலும் இந்த எண்ணிக்கை ஒரு நாட்டின் நிதிப் பாதுகாப்பு குறித்த ஒரு உத்தேசக் கருத்தை அளிப்பதாக புள்ளிவிவரத் துறை கூறுகிறது.

முதலாம் காலாண்டில் வீட்டுக் கடன் பொறுப்புகள் அதிகரித்ததற்கு, வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களின் வேகமான வளர்ச்சியே காரணம் என அது குறிப்பிடுகிறது.

கடந்த ஆண்டின் நாலாம் காலாண்டில் பதிவான 5.4 விழுக்காட்டு வளர்ச்சியைத் தொடர்ந்து, வீட்டுக் கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு 5.8 விழுக்காடு கூடியுள்ளன.

பொதுவாகவே, ஒரு சிங்கப்பூர் குடும்பத்திற்கு வீட்டுக் கடன் என்பது மிகப்பெரிய கடனாகும். இது மொத்தப் பொறுப்புகளில் குறைந்தது 70 விழுக்காட்டை வகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்