ஜோகூர் பாரு மருத்துவமனையில் மெடிசேவ் வசதியைப் பயன்படுத்தும் சிங்கப்பூர் நோயாளிகள் அதிகரிப்பு

ஜோகூர் பாரு மருத்துவமனையில் மெடிசேவ் வசதியைப் பயன்படுத்தும் சிங்கப்பூர் நோயாளிகள் அதிகரிப்பு

2 mins read
fd6b4521-bb72-4665-93d7-ee26aae4089d
ஜோகூர் பாருவிலிருந்து ‘ரீஜென்சி சிறப்பு மருத்துவமனை’ மட்டுமே சிங்கப்பூரின் எல்லை கடந்த மெடிசேவ் திட்டத்தில் இணைந்துள்ளது. - படம்: ஜேபிசிட்டிகைடு
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிறகு, ஜோகூர் பாருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மெடிசேவ் வசதியைப் பயன்படுத்தும் சிங்கப்பூர் நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரின் எல்லை கடந்த மெடிசேவ் திட்டத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜோகூர் பாருவின் ஒரே மருத்துவமனையான ‘ரீஜென்சி சிறப்பு மருத்துவமனை’ இதனைத் தெரிவித்துள்ளது.

அங்கு மெடிசேவ் வசதியைப் பயன்படுத்தும் நோயாளிகளில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர். மகப்பேற்றியல் மற்றும் மகளிர் நலச் சிகிச்சைகளுக்காகவே பலரும் அங்குச் செல்கின்றனர்.

அம்மருத்துவமனைக்கு நாள்தோறும் இந்தோனீசியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் 150 முதல் 200 நோயாளிகள்வரை செல்வதாக சிஎன்ஏ செய்தி தெரிவிக்கிறது.

ஜோகூர் பாருவில் சிகிச்சை பெறுவதற்குக் குறைந்த கட்டணமும் எளிதாகச் சென்றடையும் வசதியுமே முக்கியக் காரணங்கள் என்று ரீஜென்சி மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி செரீனா யோங் தெரிவித்தார்.

2010 மார்ச் முதல் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட மருத்துவமனைகளில் விருப்பத்தின்பேரில் பெறும் உள்நோயாளிச் சிகிச்சைகளுக்கும் ஒரே நாளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு திரும்புவதற்கும் தங்களின் மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்த சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

அதற்குமுன் நோயாளிகள் முதலில் சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஹெல்த் மேனேஜ்மென்ட் இன்டர்நேஷனல்’ (HMI) மருத்துவச் சேவை நிறுவனத்தை அணுகி, மருத்துவப் பரிசோதனை, நிதி ஆலோசனை மற்றும் தங்களுக்கு மெடிசேவ் வசதி கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற விதிக்கப்படும் அதே மெடிசேவ் தொகை வரம்புகளே வெளிநாட்டில் பெறும் சிகிச்சைகளுக்கும் பொருந்தும்.

ரீஜென்சி சிறப்பு மருத்துவமனை 2010ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தில் பங்கேற்று வருகிறது.

மற்றச் செலவுகளையும் கவனத்தில் கொள்ள அறிவுறுத்தல்

மலேசியாவில் சிகிச்சைக் கட்டணம் 24 முதல் 74 விழுக்காடுவரை குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்தச் செலவு, தங்கும் வசதி, பயண நேரம், காப்புறுதித் திட்டங்கள் ஆகியவற்றையும் நோயாளிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில், 2027ஆம் ஆண்டு தொடங்கப்படவுள்ள ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை (ஆர்டிஎஸ்) எல்லை தாண்டிய சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகூர் பாருவில் மருத்துவச் சேவைகளுக்கான தேவை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அத்தேவை அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதல் மருத்துவச் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ரீஜென்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஜோகூர் பாருமெடிசேவ்மருத்துவமனை