சிங்கப்பூரில் 30களில் உள்ளோரிடையே உயிர்மாய்ப்பு அதிகரிப்பு

சிங்கப்பூரில் 30களில் உள்ளோரிடையே உயிர்மாய்ப்பு அதிகரிப்பு

2 mins read
2017க்குப் பிறகு பதிவான ஆக அதிக இடைநிலை வயது
862a6305-a7d7-43a9-a827-0e60a6dd31ad
2024ல் உயிரை மாய்த்துக்கொண்டவர்களில் 65.8 விழுக்காட்டினர் ஆண்கள். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களிடையே உயிர்மாய்ப்பு மரணங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. 2023ல் 66ஆகப் பதிவான அந்த எண்ணிக்கை, 2024ல் 50 விழுக்காடு உயர்ந்து 99 ஆனது.

திங்கட்கிழமை (ஜூலை 27) வெளியான குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் 2025 பிறப்பு, இறப்புப் பதிவு அறிக்கையின்படி, 2024ல் சிங்கப்பூரில் 441 பேர் உயிரை மாய்த்துக்கொண்டனர். இது, முன்னர் தெரிவிக்கப்பட்ட 314 என்ற முதற்கட்ட எண்ணிக்கையைவிட 40.4 விழுக்காடு அதிகம். மேலும், 2023ல் பதிவான 434 உயிர்மாய்ப்புகளைவிட இது 1.6 விழுக்காடு கூடுதலாகும்.

2025ல் 256 உயிர்மாய்ப்பு இறப்புகள் பதிவானதாக ஆணையத்தின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண விசாரணை அதிகாரியின் தீர்ப்பு நிலுவையில் உள்ள வழக்குகள் சேர்க்கப்படும்போது இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என்று சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் தெரிவித்தது.

2023ஆம் ஆண்டில் 322 உயிர்மாய்ப்புகள் என்று 2024ன் அறிக்கை முதற்கட்டமாக பதிவுசெய்திருந்தது. பின்னர் 2025ன் அறிக்கையில் அந்த எண்ணிக்கை 434ஆக உயர்த்தப்பட்டது. இத்தகைய தரவு மாறுபாடுகள் இயல்பானவை என்று ஆணையம் கூறியிருந்தது.

2025ல் உயிரை மாய்த்துக்கொண்டவர்களின் இடைநிலை வயது 48.5. இது, 2017க்குப் பிறகு பதிவான ஆக அதிக இடைநிலை வயதாகும். முதற்கட்டத் தகவலின்படி, உயிரை மாய்த்துக்கொண்ட பெண்களின் இடைநிலை வயது 2024ல் 39.9லிருந்து 2025ல் 48.9ஆக உயர்ந்தது.

பிற வயதுப் பிரிவினரிடையே உயிர்மாய்ப்பு பொதுவாகக் குறைந்தபோதிலும், 30களில் உள்ளோரிடையே அது அதிகரித்தது. உயிரை மாய்த்துக்கொள்ளுதல், 30 முதல் 39 வயதுடையோரின் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணமாகவும் 10 முதல் 29 வயதுடையோர்க்கு முதன்மைக் காரணமாகவும் உள்ளது.

2024ல் உயிரை மாய்த்துக்கொண்டவர்களில் 65.8 விழுக்காட்டினர் (290 பேர்) ஆண்கள். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட மும்மடங்கு அதிகம்.

உயிரை மாய்த்துக்கொள்ள முயல்வதில் ஆண்கள் தீவிர வழிமுறைகளைக் கையாள்வதாகவும் மனவுளைச்சலின்போது உதவி கோருவதில் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், பராமரிப்புப் பொறுப்பு, வன்முறை போன்ற அழுத்தங்களால் பெண்கள் அதிக அளவில் உதவி நாடுகின்றனர். 2024ல் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கத்துக்கு வந்த அழைப்புகள், குறுஞ்செய்திகளில் 62.5 விழுக்காடு பெண்களுடையவை.

குடும்பப் பொறுப்புகள், வேலை அழுத்தம், சமூகத் தனிமை போன்றவை 30களில் உள்ளோருக்குப் பெருஞ்சவாலாக உள்ளன. தனது 24 மணி நேர உதவிச் சேவை எண்ணுக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் இந்த விவரங்களைச் சங்கம் சுட்டிக்காட்டியது.

இளையர்கள் பொதுவாகக் குடும்பம், கல்வி, தனிமனித உறவுச் சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர். 2025ல் பதிவான 26,499 மொத்த இறப்புகளில் உயிர்மாய்ப்பு, விபத்து போன்ற இயற்கைக்கு மாறான மரணங்கள் 2 விழுக்காடாகும்.

சிங்கப்பூரில் உயிர்மாய்ப்பு மரண விகிதம், 100,000 சிங்கப்பூர்வாசிகளுக்கு 8.23ஆக உள்ளது.

தனது அவசரகாலத் தலையீட்டுச் சேவைகள் மூலம் 13 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒருவரை உயிரை மாய்த்துக்கொள்ளும் அபாயத்திலிருந்து காப்பாற்றுவதாகச் சங்கம் தெரிவித்தது. கடந்த ஆண்டில் 55,000க்கும் மேற்பட்ட அழைப்புகளுக்குச் சங்கம் பதிலளித்ததோடு, 1,200க்கும் மேற்பட்டோருக்கு நேரில் ஆலோசனைச் சேவைகளையும் ஆதரவையும் வழங்கியது.

குறிப்புச் சொற்கள்