தங்கள் பச்சிளங் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள தந்தையர் விடுப்பில் சென்ற தந்தைமார்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.
அரசாங்கம் மானியம் வழங்கும் தந்தையர் விடுப்பைப் பயன்படுத்தியோர் விகிதம் 2022ஆம் ஆண்டில் 53 விழுக்காடாக இருந்தது. இது 2023ஆம் ஆண்டில் 56 விழுக்காடாக ஏற்றம் கண்டது.
இந்த ஆக அண்மைய புள்ளிவிவரங்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டது.
மகப்பேறு விடுப்பு பயன்பாடு கடந்த சில ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து அதிகமாக 74 விழுக்காட்டில் உள்ளதாக திங்கட்கிழமை (ஜூலை 7) வெளியிடப்பட்ட குடும்பப் போக்குகள் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தைப் பராமரிப்பு விடுப்பைப் பயன்படுத்தும் தாய்மார்கள் சற்று குறைந்தது. 2022ஆம் ஆண்டில் 61 விழுக்காட்டினர் அவ்விடுப்பைப் பயன்படுத்தினர். 2023ஆம் ஆண்டில் இது 58 விழுக்காடாகக் குறைந்தது.
தந்தைமார்களைப் பொறுத்தவரை, 2023ஆம் ஆண்டில் 53 விழுக்காட்டினர் தங்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பைப் பயன்படுத்தினர். 2022ஆம் ஆண்டில் 52 விழுக்காடு தந்தைமார்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பில் சென்றனர். 2021ஆம் ஆண்டில் இந்த விகிதம் 49 விழுக்காடாக இருந்தது.
2023ஆம் ஆண்டுக்கான தரவுகளே ஆக அண்மைய தரவுகளாகக் கிடைத்துள்ளன.
ஆண்டு முடிந்ததும், அவ்வாண்டில் பயன்படுத்தப்பட்ட விடுப்பு தொடர்பாக ஏற்பட்ட செலவுக்கான நிதியைப் பெற அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்ய முதலாளிகளுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பெறப்பட்ட தரவுகளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத முதலாளிகள் சேர்க்கப்படவில்லை.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தந்தையர் விடுப்பு மேம்படுத்தப்பட்டது. தந்தையர் விடுப்பு இரண்டு வாரங்களிலிருந்து நான்கு வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
சம்பளத்துடனான ஆறு வாரப் பெற்றோர் விடுப்பைப் பெற்றோர் பகிர்ந்துகொள்ளும் முறை ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.