சிங்கப்பூரில் புற்றுநோயால் பாதிக்கப்படும் இளையர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 40 வயதுக்கும் குறைவானவர்களில் 4,995 பேருக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
2003ஆம் ஆண்டுக்கும் 2007ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தைவிட இது 34 விழுக்காடு அதிகம். அக்காலகட்டத்தில் 40 வயதுக்கும் குறைவானவர்களில் 3,729 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த ஆக அண்மைய தகவல் சிங்கப்பூர் புற்றுநோய் பதிவகத்தின் வருடாந்திர அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இடம்பெறும் முதல் காலகட்டம் 1968ஆம் ஆண்டுக்கும் 1972ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டதாகும்.
அப்போது 40 வயதுக்கும் குறைவானவர்களில் 1,710 பேர் மட்டுமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
“சிங்கப்பூரில் 50 வயதுக்கும் குறைவானவர்கள் புற்றநோயால் பாதிப்படைவது மற்ற வயதுப் பிரிவுகளைக் காட்டிலும் அதிகம். ஆண்களைப் பொறுத்தவரை, 30 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டோரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆக அதிக அளவில் ஏற்றம் கண்டுள்ளது. பெண்களைப் பொறுத்தவரை, இந்த வயதுப் பிரிவு 40 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டதாகும்,” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் புற்றுநோய்க் கழகத்தின் புற்றுநோய் பிரிவைச் சேர்ந்த டாக்டர் குலோரியா சான் தெரிவித்தார்.
இது உலகளாவிய போக்கு என்று சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தின் பதின்மவயதினர், இளையர் புற்றுநோய் திட்டத்தின் தலைவரான டாக்டர் ஐலீன் பூன் கூறினார்.
1995ஆம் ஆண்டிலிருந்து 50 வயதுக்கும் குறைவான வயதுப் பிரிவில் மட்டுமே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு நீடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோயால் பாதிப்படைந்தோர் இரட்டிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் மலக்குடல் புற்றுநோயால் பாதிப்படையும் இளம் ஆடவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 விழுக்காடு அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்றுநோய், இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஒன்றாக உள்ளது. 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடையிலான பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஆக அதிகளவில் ஏற்றம் கண்டுள்ளது.
இளையர்களும் புற்றுநோய் பரிசோதனைகளுக்குச் செல்ல வேண்டும் என்று டாக்டர் சான் மேலும் கூறினார். பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துக்காட்டினார்.
லுக்கீமியா, லிம்ஃபோமா, மல்டிபல் மைலோமா போன்ற ரத்தப் புற்றுநோய்களைக் குறிக்கும் ரத்தவியல் வீரியம் மிக்க கட்டிகள், இளம் பருவத்தினர் மற்றும் இளம் வயதுவந்தோர் புற்றுநோய்களில் குறிப்பிடத்தக்க விகிதத்தைக் கொண்டுள்ளன என்று டாக்டர் பூன் குறிப்பிட்டார்.

