புகைமூட்டம் காரணமாகக் குளிரூட்டிப் பராமரிப்பு சேவைக்கான தேவை அதிகரிப்பு

புகைமூட்டம் காரணமாகக் குளிரூட்டிப் பராமரிப்பு சேவைக்கான தேவை அதிகரிப்பு

படம்: வீரா ஏர்கான் சர்விசஸ்

14 Oct 2026 - 7:54 pm

2 mins read

புகைமூட்டம் மோசமடைந்து வருவதால் குளிர்சாதனப் பெட்டிகளைப் பராமரிக்கும் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த காலாண்டில் குளிர்சாதனத் தொழில்நுட்பர்களுக்கான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் அதிக அளவில் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு முதன்முறையாக ஆரோக்கியமற்ற நிலையை அடைந்த செப்டம்பர் மாதத்தில் குளிர்சாதனப் பராமரிப்புக்கான கோரிக்கைகள் பேரளவில் உயர்ந்து, அக்டோபர் மாதத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

புகைமூட்டம் தொடங்கிய செப்டம்பர் மாதத்தில்தான் குளிர்சாதனப் பராமரிப்புச் சேவை கோரிக்கைகள் அதிகளவில் உயர்ந்ததாக வீட்டுச் சேவை தளமான ‘ஸ்டிரின்ஸ்எஸ்ஜி’ நிறுவனத்தின் இணை நிறுவனர் சுஷில் ஆச்சார்யா தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 297 கோரிக்கைகள் மட்டுமே விடுக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு செப்டம்பரில் அவை 792ஆக உயர்ந்தன. அக்டோபரில் தீவு முழுவதும் காற்றின் தரம் மேலும் மோசமடைந்ததால், இக்கோரிக்கைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது.

அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகள், செப்டம்பர் மாதத்தின் அதே கால அளவையும் 2025 அக்டோபர் மாதத்தையும்விட 23 விழுக்காடு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடர்ந்த புகைமூட்டமும் வெப்பமான வானிலையும் இணைந்து நிலவுவதால், குடும்பங்களும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் குளிர்சாதனப் பெட்டிகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய முற்பட்டுள்ளன.

அண்மைய மாதங்களில் வாடிக்கையாளர்களின் தேவைகளும் பராமரிப்புச் சேவைக்கான விசாரிப்புகளும் 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாகத் குளிர்சாதனப் பராமரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஹோட்டல்கள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகள் பழுதடைவதைவிட, போதிய குளிர்ச்சியை வழங்கவில்லை என்ற புகார்களே அதிகம் கிடைப்பதாக ‘வீரா ஏர்கான் சர்விசஸ்’ நிறுவனத்தின் விற்பனைச் செயல்பாட்டு மேலாளர் ரஃபியுதீன் இஸ்மாயில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
குளிரூட்டிபராமரிப்புபுகைமூட்டம்