‘ஏஐ’ யால் அதிகரித்த தேவை; தங்கத்தைவிட அதிக லாபம் ஈட்டும் கணினி மறுவிற்பனையாளர்

‘ஏஐ’ யால் அதிகரித்த தேவை; தங்கத்தைவிட அதிக லாபம் ஈட்டும் கணினி மறுவிற்பனையாளர்

2 mins read
a9c3887e-6d76-4aac-9814-e0a9243ac384
பயன்படுத்தப்பட்ட பழைய மடிக்கணினியில் இருந்து அகற்றப்படும் நினைவகச் சில்லுகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் மறுவிற்பனை செய்துவருபவர் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஆனால், கடந்தாண்டின் இறுதியில் அவரது வர்த்தகத்தின் போக்கில் சற்று மாறுதல்கள் ஏற்பட்டன. வாடிக்கையாளர்கள் அவரிடம் மடிக்கணினிகளை வாங்குவதற்குப் பதிலாக, அதில் இருக்கும் உதிரி பாகமான நினைவகச் சில்லுகளை மட்டும் தனியாக விற்க முடியுமா என்று கேட்கத் தொடங்கினர்.

கணினிகளிலும் திறன்பேசிகளிலும் தரவுகளைச் சேமிக்கவும், அவற்றின் வேகத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும் பகுதி மின்கடத்திகளுக்குத் தற்போது உலகளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கணினி சில்லுகளுக்கான உலகளாவிய தட்டுப்பாடு

எஸ்கே ஹய்னிக், மைரோன் போன்ற முன்னணி சில்லு தயாரிப்பு நிறுவனங்களும், தரவு நிலையங்களுக்குத் தேவையான உயர்தர சில்லுகளைத் தயாரிப்பதில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளன.

அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் வளர்ச்சியே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இதனால், கணினிகளில் தரவுகளைத் தற்காலிகமாகவோ (RAM) அல்லது நிரந்தரமாகவோ (ROM) சேமிக்கப் பயன்படும் சில்லுகள் போன்ற உதிரி பாகங்களின் விநியோகம் குறைந்துள்ளது.

அவற்றின் விலை நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விலையேற்றம் மின்னணு சாதனங்களை வாங்க விரும்பும் சாமானிய மக்களுக்குச் சவாலாக இருந்தாலும், முருகன் போன்ற வர்த்தகர்களுக்கு அது ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது. 2025ஆம் ஆண்டு இறுதி முதல் சிம் லிம் ஸ்குவேர் பகுதியில் இருக்கும் சில கடைகள் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை வாங்கி, அவற்றைப் பிரித்து அதிலுள்ள சில்லுகளை மட்டும் தனியாக எடுத்து விற்பனை செய்யும் தொழிலில் இறங்கியுள்ளன.

“இந்த வர்த்தகம், தங்கம் அல்லது பங்குச் சந்தையைவிட மேலானது. அவற்றில் செய்யும் விலைகள் ஏற்ற இறக்கத்தில் இருக்கின்றன. ஆனால் கணினி சில்லுகளின் விலையோ குறையவே இல்லை. இது மிகவும் லாபகரமான ஒன்றாக இருக்கிறது,” எனத் திரு முருகன் கூறுகிறார்.

எனினும், தனது லாப விகிதத்தை அவர் வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.

குறிப்புச் சொற்கள்