சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் மே 3ஆம் தேதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொதுத் தேர்தல் தொடர்பான காணொளிகள் இணையத்தில் அதிகரித்துள்ளன.
ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை 70க்கும் மேற்பட்ட அத்தகைய காணொளிகள் இணையத்தில் கண்டறியப்பட்டன. அந்தக் காணொளிகள் அனைத்தும் டிக்டாக் தளத்தில் பதிவேற்றப்பட்டன.
வேட்பாளர்கள் கூறியதை மின்னிலக்க முறையில் மாற்றியோ திரித்தோ கூறும் காணொளிகளைத் தடை செய்யும் புதிய சட்டம் நடப்புக்கு வந்தபோதும் அண்மைய நாள்களில் அத்தகைய காணொளிகள் அதிகம் பரவின.
புதிய சட்டத்தின்கீழ் போலிக் காணொளிகளை அகற்ற அவற்றைப் பதிவேற்றியவருக்கோ சமூக ஊடகத் தளத்திற்கோ திருத்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
இணங்க மறுப்போருக்குச் சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்கப்படக்கூடும்.
ஏப்ரல் 21ஆம் தேதி நிலவரப்படி வேட்பாளர்களைத் தவறாக சித்திரிக்கும் ‘டீப்ஃபேக்’ எனும் வன்போலிக் காணொளிகளுக்கு எதிராக எந்தவொரு திருத்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு அதுபற்றி அறிவிக்கும் என்று குறிப்பிட்டது.
பொதுத் தேர்தல் சமயத்தில் சிங்கப்பூரின் இணையத் தளங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சு சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
வேட்பாளர்களும் பொதுமக்களும் தவறான தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

