பேரளவுக் கொள்முதல் மோசடிச் சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
ஏப்ரல் மாதத்திலிருந்து $6.8 மில்லியன் இழப்பு
47c1f379-030b-4d34-9559-537fd3df1949
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிகமான பொருள்களை வாங்குவதற்கான பேரளவுக் கொள்முதல் தொடர்பான மோசடிச் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

புதுப்பிப்பு, உணவு, பானம், சில்லறை விற்பனை, சேவைத் துறைகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த மோசடிச் சம்பவங்களில், பாதிக்கப்பட்டோர் மொத்தம் ஏறக்குறைய $6.8 மில்லியனை இழந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இத்தகைய 27, 427 மோசடிச் சம்பவங்கள் குறித்துப் புகாரளிக்கப்பட்டதாக ஆகஸ்ட் 27ஆம் தேதி, காவல்துறை கூறியது.

ஜூன் 26ஆம் தேதி வெளியிட்ட ஆலோசனைக் குறிப்பில் ஏப்ரல் 12ஆம் தேதியிலிருந்து 60 பேர் மொத்தம் 831,000 வெள்ளியை இழந்ததாக அது கூறியிருந்தது.

தற்போது அந்த எண்ணிக்கையும் தொகையும் வெகுவாக அதிகரித்துள்ளன.

மோசடிக்காரர்கள் உள்ளூர்ப் பள்ளிகளின் ஆசிரியர் என்ற போர்வையில், உணவகங்கள், சில்லறை விற்பனையாளர்கள், சேவைத் துறை வர்த்தக நிறுவனங்களை ‘வாட்ஸ்அப்’ செயலி மூலம் தொடர்புகொண்டதாகக் காவல்துறை சொன்னது.

பேரளவிலான கொள்முதலுக்கோ முன்பதிவுக்கோ அவர்கள் முயன்றனர்.

பின்னர் கூடுதல் பொருள்களைக் கேட்டனர். வர்த்தகங்களிடம் கையிருப்பு இல்லாத, குறிப்பிட்ட நிறுவனத் தயாரிப்புகளைக் கேட்டனர். அல்லது, குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்ய இயலாத அளவு அதிகமான எண்ணிக்கையில் பொருள்களைக் கேட்டனர்.

பின்னர், மோசடிக்காரர்களே போலியான ஒரு விநியோகிப்பாளரைப் பரிந்துரைத்து அவரிடமிருந்து வாங்கித் தரும்படி கேட்டனர்.

சிலர் தாங்கள் முன்தொகை செலுத்திவிட்டதற்கான போலி ஆவணங்களின் படத்தை அனுப்பினர். பாதிக்கப்பட்டோர் அதை நம்பி, போலி விநியோகிப்பாளருக்குப் பணம் அனுப்பிவைத்தனர் என்று காவல்துறை சொன்னது.

‘வாடிக்கையாளரிடமிருந்து’ பணம் வரவில்லை அல்லது போலி விநியோகிப்பாளர் பொருள்களை அனுப்பவில்லை அல்லது வாடிக்கையாளர், விநியோகிப்பாளர் இருவரையும் தொடர்புகொள்ள இயலவில்லை என்பதை அறிந்த பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டோர் உணர்ந்தனர்.

மோசடிச் சம்பவங்களில் இழப்பைச் சந்திப்பதைத் தவிர்க்க நிறுவனங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை ஆலோசனை கூறியது.

தாங்கள் தொடர்புகொள்வோரின் அடையாளத்தை உறுதிசெய்தல், புதிய விநியோகிப்பாளருக்கு முன்தொகை செலுத்துவதைத் தவிர்த்தல், விநியோகிப்பாளரை நேரில் சந்தித்து, அனுப்பிவைக்கப்பட்ட பொருள்களுக்கு மட்டுமான பணத்தைத் தருதல் போன்ற நடவடிக்கைகளை அது பரிந்துரைத்தது.

குறிப்புச் சொற்கள்