சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கட்டாயமற்ற ஒருங்கிணைந்த மருத்துவக் காப்புறுதித் திட்ட (ஐபி) ‘ரைடர்’ மீது பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ள போதிலும் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவை எட்டவில்லை.
தனியார் மருத்துவமனைக் கட்டணங்களும் காப்புறுதிக் கோரிக்கைகளும் விரைவாக உயர்ந்துவரும் நிலையில், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின்படி காப்புறுதி நிறுவனங்கள் கடந்த ஏப்ரலில் புதிய ‘ரைடர்’களை அறிமுகப்படுத்தின.
மருத்துவச் செலவுகளை பயனீட்டாளர்கள் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், இப்புதிய ‘ரைடர்’கள் காப்பீட்டு நிறுவனம் பணத்தை வழங்குவதற்கு முன்பு, வாடிக்கையாளர் தம் சொந்தப் பணத்திலிருந்து செலுத்த வேண்டிய குறிப்பிட்ட தொகையை ஈடுசெய்யாது.
மேலும், வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய இணைக் கட்டணத்தின் உச்சவரம்பு $6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பழைய ‘ரைடர்’களுடன் ஒப்பிடுகையில் இவற்றின் ஆண்டு தவணைத் தொகை 16 முதல் 84 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
சிங்கப்பூரின் ஏழு ‘ஐபி’ காப்புறுதி நிறுவனங்களில் புருடென்ஷியல், ஏஐஏ, கிரேட் ஈஸ்டர்ன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இப்புதிய ‘ரைடர்’களுக்கு நல்ல வரவேற்பும் விற்பனையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
அதேவேளையில், ராஃபிள்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ், இன்கம் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து புதிய ரைடர் தொடர்பான கேள்விகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தன. இருப்பினும், அவை இன்னும் முழுமையான விற்பனையாக மாறவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் புதிய மாற்றங்களைப் புரிந்துகொள்ள கூடுதல் காலம் தேவைப்படலாம் என்றும் அவை கூறின.
எச்எஸ்பிசி லைஃப், சிங்லைஃப் ஆகிய நிறுவனங்கள் எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் காணவில்லை.
தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் உடனடியாகப் புதிய ‘ரைடர்’களுக்கு மாறாமல் இருப்பதற்கு, கொள்கை மாற்றங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது, வயதான காலத்தில் மருத்துவக் காப்புறுதித் திட்டத்துக்கு மாற்றினால் ஏற்படக்கூடிய நிதிச்சுமை, பழக்கப்பட்ட திட்டங்களையே தொடர நினைக்கும் மனப்போக்கு ஆகியவையே முக்கியக் காரணங்களாக இருப்பதாகப் பொருளியல், காப்புறுதித் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


