சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட 17 வயது இளையரைத் தாக்கியதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 5 மாதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு காரை வாடகைக்கு எடுப்பதற்காக அந்த இளையர், தமது வயதை ஒட்டிய இன்னொருவரிடம் 200 வெள்ளி கடன் வாங்கினார். 23 வயதுப் பெண்ணிடமிருந்து காரை வாடகைக்கு எடுத்தார்.
சிங்கப்பூரில் 18 வயதை எட்டியவர்களே வாகன உரிமம் பெற முடியும்.
வாடகை காரை இளையர் மோட்டார்சைக்கிளோட்டியுடன் மோதினார். அதற்கான செலவு $8,400. அந்தச் செலவைப் பெண் ஏற்கவேண்டியதாயிற்று.
இளையரின் பெற்றோர் கடன்கொடுத்தவர்களிடம் $1,000 தந்து அதனைப் பிரித்துக்கொள்ளச் சொன்னார்கள்.
கடன்கொடுத்த இருவரும் சென்ற ஆண்டு (2024) நவம்பர் மாதம் இளையரிடமிருந்து பணத்தை மீட்க ஆட்களை அமர்த்தினர்.
அன்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஒரு புளோக்கில் இளையரை ஆறு பேர் தாக்கினர். பின்னர் லிம் சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் இரண்டு மணி நேரத்திற்கு இளையர் சரமாரியாகக் குத்தப்பட்டார்.
தாக்கியவர்களில் ஒருவரான 22 வயது ஆடவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் அரசாங்கத் தரப்புக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 13 மாதங்களிலிருந்து 18 மாதங்களுக்குக் கூட்டப்பட்டது. முன்னைய நிகழ்வுகளைக் கருத்தில்கொள்ளும்போது அது குறைவு என்று அரசாங்கத் தரப்புக் கருதியது.
தொடர்புடைய செய்திகள்
தாக்குதல் குற்றச்சாட்டைத் தவிர்த்து மேலும் நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தார்.
எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து அவருக்கு ஒட்டுமொத்தமாக ஒரு பிரம்படியுடன் 23 மாதங்கள் சிறைத்தண்டனையும் $800 அபராதமும் விதிக்கப்பட்டன.
வன்முறையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட முதல் குற்றவாளிக்கு இவ்வாண்டு ஜூன் 5ஆம் தேதி ஒரு பிரம்படியுடன் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்கிறது.