அரசாங்கச் செயல்பாடு குறித்து மூவரில் இரு சிங்கப்பூரர்கள் மனநிறைவு: கருத்தாய்வு

அரசாங்கச் செயல்பாடு குறித்து மூவரில் இரு சிங்கப்பூரர்கள் மனநிறைவு: கருத்தாய்வு

2 mins read
e02cb3e2-7050-4a33-88c6-d7aa33a04f73
சிங்கப்பூரின் மத்திய வர்த்தகப் பகுதி. - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் 66 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் மனநிறைவு கொண்டுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து மனநிறைவு விகிதம் 9 விழுக்காட்டுப் புள்ளிகள் உயர்ந்துள்ளதாகச் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) தெரிவிக்கப்பட்டது.

யூகவ் (YouGov) தளத்தின் சிங்கப்பூர் பயனீட்டாளர் உணர்வைக் கண்காணிக்கும் குறியீட்டின்படி, சிங்கப்பூரர்கள் மூவரில் இருவர், அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து மனநிறைவு கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 28 விழுக்காட்டினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வலுவடைந்துள்ளது. அந்த ஆண்டு 57 விழுக்காட்டினர் அரசாங்கத்தின் மீது மனநிறைவு கொண்டிருந்ததாகக் கூறினர்.

‘மிலெனியல்ஸ்’ என்றழைக்கப்படும் நடுத்தர வயதினரிடையே ஆக அதிகமானோர் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் மனநிறைவு கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதேவேளையில், 32 விழுக்காட்டு ஆண்களும் ‘ஜென் எக்ஸ்’ என்றழைக்கப்படும் தலைமுறையினரில் 39 விழுக்காட்டினரும் அதிருப்தி தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி குறித்த நம்பிக்கையும் கடந்த ஆறு மாதங்களில் சற்று கூடியுள்ளது.

சிங்கப்பூரர்கள் அறுவரில் ஒருவர் (21 விழுக்காட்டினர்) அடுத்த ஆறு மாதங்களில் பொருளியல் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கின்றனர். 32 விழுக்காட்டினர் பொருளியல் நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். அதேவேளையில், 22 விழுக்காட்டினர் பொருளியல் சுருங்கும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

இதன் தொடர்பில் இளம் தலைமுறையினர் கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ‘ஜென் ஸீ’ எனும் இளம் தலைமுறையினரில் 29 விழுக்காட்டினர், பொருளியல் வளர்ச்சி குறித்துக் கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதேபோல், ‘மிலெனியல்ஸ்’ தலைமுறையினரிடையே இவ்விகிதம் 32 விழுக்காடாக உள்ளது.

குறிப்பிட்ட துறைகள் குறித்துக் கேட்கப்பட்டதற்குச் சட்ட ஒழுங்கில் அரசாங்கத்தின் செயல்பாடு மனநிறைவு அளிப்பதாக ஆக அதிகமானோர் தெரிவித்தனர். இதில் அரசாங்கம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என்று 21 விழுக்காட்டினரும் சிறப்பாகச் செயல்படுகிறது என்று 49 விழுக்காட்டினரும் தெரிவித்தனர்.

அதற்கு அடுத்தபடியாக ஆக அதிகமானோர் அனைத்துலகத் தொடர்புகள், அரசதந்திரம், பொருளியல் நிர்வாகம் ஆகியவற்றில் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். கருத்தாய்வில் பங்கேற்ற பாதிக்கும் அதிகமானோர் இவற்றின் தொடர்பில் அரசாங்கச் செயல்பாடு மனநிறைவு அளிப்பதாகத் தெரிவித்தனர்.

எனினும், வாழ்க்கைச் செலவினம், கட்டுப்படியான விலையில் வீடு கிடைப்பது ஆகியவற்றில் மக்களிடையே மனநிறைவு ஆகக் குறைவாக உள்ளது. இவ்விரு அம்சங்களிலும் அது 27, 26 விழுக்காடாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்