பாலியல் குற்றங்கள் கூடின; அறிமுகமானவர்களே அத்துமீறிய அவலம்

பாலியல் குற்றங்கள் கூடின; அறிமுகமானவர்களே அத்துமீறிய அவலம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

08 Apr 2026 - 1:42 pm

2 mins read

சிங்கப்பூரில் 2024 முதல் 2025 வரை பாலியல் வன்கொடுமைக் குற்றங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்தது.

பெரும்பாலான சம்பவங்களில், பாதிக்கப்பட்டோர்க்கு அறிமுகமானவர்களே குற்றவாளிகளாக இருந்தனர்.

பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் குற்றங்கள் அதிகரித்ததற்குப் பாதிக்கப்பட்டோர்க்குத் தெரிந்தவர்களே முதன்மைக் காரணங்களாக இருந்தனரா என்பது குறித்தும், அச்சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களின் குற்றங்கள் வகைப்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் வினா எழுப்பப்பட்டது.

அதற்கு, உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங் புதன்கிழமை (ஏப்ரல் 8) பதிலளித்தார்.

கடந்த 2024, 2025ஆம் ஆண்டுகளில் மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது என உள்துறை அமைச்சு குறிப்பிட்டது

மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை 1,427லிருந்து 1,531 அதிகரித்தது என்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களின் எண்ணிக்கை 401லிருந்து 479ஆகக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான வன்கொடுமைச் சம்பவங்களிலும் பாதிக்கும் மேற்பட்ட மானபங்கச் சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களே குற்றங்களில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிமுகமானவர்களே பாலியல் வன்கொடுமையிலும் துன்புறுத்தலிலும் ஈடுபட்ட விகிதத்தைப் பொறுத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய மாற்றமில்லை.

கடந்த ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமைக் குற்றங்களில் ஏறத்தாழ 33 விழுக்காடு குடியிருப்பு வளாகங்களிலும் 18 விழுக்காடு வணிக வளாகங்களிலும் 3 விழுக்காடு கல்வி நிறுவனங்களிலும் புரியப்பட்டதாக அமைச்சின் அறிக்கை சுட்டியது.

இருப்பினும், பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கையாண்டு வருகிறது என்றும் அத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் பாதிக்கப்பட்டோர் புகாரளிப்பதை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு ஆதரவை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சு தெரிவித்தது. இத்தகவலை வெளியிட்ட அமைச்சு, அனைத்து விதமான பாலியல் குற்றங்களுக்கும் எதிராக அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்
உள்துறை அமைச்சுநாடாளுமன்றம்குற்றச்செயல்பாலியல் வன்கொடுமை