சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில், மின்சாரக் கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவும் ஈரானும் அண்மையில் உடன்பாடு ஒன்றைச் செய்துகொண்டன.
அதன் மூலம், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய்யையும் எரிவாயுவையும் கொண்டுவர பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதாக எரிசக்திச் சந்தை ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சொன்னது.
ஜூலை மாதத்தில் தொடங்கும் காலாண்டில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் கட்டண உயர்வு, அதிகபட்சம் 30 விழுக்காடுவரை இருக்கும் என்று வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஈரான் போரால் ஏற்கெனவே அதிகரித்த எரிசக்தி விலைகளால் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஒவ்வொரு காலாண்டிலும் மறுஆய்வு செய்யப்படும் எரிசக்திக் கட்டணம், பொருள், சேவை வரியையும் சேர்த்து, தற்போது ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 29.72 காசாக உள்ளது.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள்படி கிட்டத்தட்ட 62.8 விழுக்காட்டு வீடுகள் அந்தக் கட்டணத்தைச் செலுத்துகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அடுத்த காலாண்டிற்கான கட்டணம் 20லிருந்து 25 விழுக்காட்டுக்கு அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறார் எஸ் அண்ட் பி குளோபல் எனெர்ஜி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை வல்லுநர் அமாண்டா காங்.
அவ்வகையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நான்கறை வீட்டில் வசிப்போரின் மாதாந்தர மின்சாரக் கட்டணம் ஏறக்குறைய $30 அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தற்போது, அத்தகைய வீடுகளில் வசிப்போர் மாதந்தோறும் கிட்டத்தட்ட $88 கட்டணம் செலுத்துகின்றனர் என்று எஸ்பி குழுமம் குறிப்பிட்டது.
இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து எரிசக்திக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன.
மேலும், வளைகுடா பகுதியில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாலும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும் எரிபொருள் விலைகள் கடுமையாக அதிகரித்தன.
சிங்கப்பூர் அதன் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்ய அதிகளவில் இறக்குமதிகளை எதிர்பார்க்கிறது. உள்ளூரில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டு மின்சாரத்தை உற்பத்திசெய்ய இயற்கை எரிவாயுவை அது இறக்குமதி செய்தது.

