சிங்கப்பூரின் பழைய தொழிற்பேட்டைகளில் ஒன்றான சுங்கை காடுட்டில் பூனைகளின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக பூனைப் பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் பூனைகளையும் பூனைக்குட்டிகளையும் பிற பகுதிகளிலிருந்து தங்கள் தங்குவிடுதிகளுக்கும் சுங்கை காடூட், துவாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளுக்கும் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.
குடும்பங்களைப் பிரிந்து இங்கு வந்து வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் தெருவில் உள்ள பூனைகளைச் செல்லப்பிராணிகளாக நினைக்கின்றனர் என்று விலங்குநல ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால், அவர்கள் கொண்டுவரும் பெரும்பாலான இளம் பூனைகளுக்கு இன்னும் கருத்தடை செய்யப்படவில்லை என்று தெரிவித்த அவர்கள், அவை எண்ணிக்கையில் பெருகுவதாகக் கூறினர்.
சுங்கை காடுட் வட்டாரத்தில் தற்போது 40க்கும் அதிகமான பூனைகள் உள்ளதாக அவற்றுக்கு உணவளிக்கும் சிலர் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 3,000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட துவாஸ் தொழிற்பேட்டையில் பூனைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 100 என்று அவர்கள் சுட்டினர்.
இந்நிலையில், சுங்கை காடுட்டில் உள்ள பூனைகள் ஆதரவின்றி விடப்படும் நிலை குறித்தும் ஆர்வலர்கள் விளக்கம் அளித்தனர்.
500 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சுங்கை காடுட் வட்டாரத்துக்கான பெருந்திட்டம் 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதை அடுத்து அங்கிருந்த மர வேலை, தட்டுமுட்டுப் பொருள்கள் விற்கும் வர்த்தகங்கள், கட்டுமானம், கழிவு நிர்வாகம் ஆகிய பல்வேறு நிறுவனங்கள் வேறு இடங்களுக்கு மாறிச் சென்றுவிட்டன.
அதன் காரணமாக அங்குள்ள பூனைகள் தனித்து விடப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
விலங்குநல, கால்நடைச் சேவைகளை வழங்கும் அமைப்பு (ஏவிஎஸ்), மனிதவள அமைச்சு, ஜூரோங் நகர மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து பூனைகளை வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்வது பற்றி ஆலோசிக்கிறது.
வெளிநாட்டு ஊழியர்களிடையே கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற ஏவிஎஸ் அமைப்பு, பூனைகளுக்கு உணவளிப்பதன் மூலம் அவற்றை அந்த வெளிநாட்டு ஊழியர்கள் பராமரிப்பதைப் பாராட்டவேண்டும் என்றார்.

