சிங்கப்பூர்க் கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் குழுக்களில் தொண்டூழியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியுள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு தொண்டூழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகரித்ததாகத் தூய்மைப் பணிகளை ஏற்பாடு செய்யும் குழுக்கள் தெரிவித்தன.
அது, சுற்றுப்புறத்தைப் பேணுவதில் பொதுமக்களுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு மணிநேர தூய்மைப்படுத்தும் பணியின்போது 65 தொண்டூழியர்கள், 80 பைகளில் 320 கிலோகிராம் குப்பையைச் சேகரித்தனர்.
சிங்கப்பூர்க் கடற்கரைகளில் ஆண்டுதோறும் பருவநிலைக்கு ஏற்ப குப்பைகளின் அளவு மாறுபடுவதாக ஸ்ட்ரிடி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி யாசர் அமின் கூறினார்.
“ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் அதிக குப்பையைக் காண முடியும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரியில் குப்பைகளைப் பார்ப்பது அரிது,” என்றார் அவர்.
2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக பெருங்கடல் குப்பை குறியீட்டின்படி சிங்கப்பூர்க் கடற்கரைகளில் அடிக்கடி காணப்படும் குப்பைகளில் உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள், சிகரெட் துண்டுகள் ஆகியவை அடங்கும்.
இதற்கிடையே, இளம் சிங்கப்பூரர்கள் கடற்கரைகளைச் சுத்தம் செய்ய அதிகம் முன்வருவதைக் காண முடிவதாகவும் அமைப்புகள் குறிப்பிட்டன.
தொடர்புடைய செய்திகள்
இகோமைல்ஸ் என்ற இளையர் குழு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உடற்பயிற்சிக்காகவும் தூய்மைப்படுத்தும் பணிகளுக்காகவும் சந்திக்கிறது.
அந்தக் குழுவின் பங்கேற்பாளர் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துவருவதாக இகோமைல்ஸ் குழு தெரிவித்தது.
இதுவரை 560 கிலோகிராம் எடையுள்ள குப்பையைச் சேகரித்திருப்பதாகக் குழு குறிப்பிட்டது.

