கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகப் (எம்.பி) பொறுப்பு வகித்துள்ளார் மக்கள் செயல் கட்சியின் (மசெக) லூயிஸ் இங்.
இந்த 10 ஆண்டுகாலப் பயணத்தை அவர் நினைவுகூர்ந்தார். தமது பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்களைப் பற்றி அவர் விவரித்தார்.
நீ சூன் குழுத்தொகுதியின் நீ சூன் ஈஸ்ட் பிரிவுக்கான நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டுத் தேர்தலிலும் அவர் மீண்டும் வெற்றிபெற்றறார்.
திரு இங், 2001ல் ஏக்கர்ஸ் விலங்கு நலன் நன்கொடை அமைப்பைத் தொடங்கினார். 2021ல் அதன் தலைமை நிர்வாக அதிகாரிப் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.
10 ஆண்டுகளில் அவர், நாடாளுமன்றத்தில் 1,055 கேள்விகள், 15 ஒத்திவைப்புத் தீர்மானங்கள் உள்ளிட்டவற்றை முன்வைத்திருப்பதை நினைவுகூர்ந்தார். அதோடு, மசோதா தொடர்பான தமது உரைகளின்வழி 269 சட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டியதாகவும் திரு இங் குறிப்பிட்டார்.
“குரல் கொடுப்பதுடன் எல்லாருக்கும் அதிலும் குறிப்பாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொண்டாற்ற முடிந்தது எனக்குக் கிடைத்த அமோக பாக்கியம். இது, நான் என்றுமே குறைத்து மதிப்பிடாத பொறுப்பாகும்,” என்று திரு இங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பிறரின் வாழ்வில் மாற்றம் கொண்டுவர வாய்ப்பளிக்கப்பட்டதற்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகவிருக்கிறாரா என்று மதர்ஷிப் ஊடகம் கேட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

