அண்மைய பொதுத் தேர்தலில் களமிறங்கிய சுயேச்சை வேட்பாளர் டேரல் லோ, ராடின் மாஸ் தனித்தொகுதியில் வெற்றிபெற்ற மக்கள் செயல் கட்சியின் திரு மெல்வின் யோங்கிற்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
தேர்தலில் இடம்பெற்ற நேர்மையான போட்டிக்கும் 28 வயது திரு லோ, திரு யொங்கிற்கு நன்றி கூறினார்.
சுயேச்சை வேட்பாளர் திரு லோ, மக்கள் செயல் கட்சியின் திரு யோங், சீர்திருத்த மக்கள் கூட்டணியின் திரு குமார் அப்பாவு ஆகியோர் ராடின் மாஸ் தனித்தொகுதியில் போட்டியிட்டனர்.
திரு யோங் 69.17% வாக்குகளை வென்று தனித்தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார். திரு லோ 23.47% வாக்குகளைப் பெற்றார்.
மே 4ஆம் தேதி திரு யோங்கிற்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட திரு லோ, பொதுத் தேர்தலில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும் ராடின் மாஸ் குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
புக்கிட் பர்மாயின் புளோக் 103, 104, புக்கிட் பர்மாய் ஹில்லாக் ஆகியவற்றில் இரவு நேரங்களில் காணப்படும் எலிகள், கரப்பான் பூச்சிகள், 100 விஷார்ட் சாலையில் உள்ள கூட்டுரிமை வீட்டுக்கு அருகே உள்ள கரப்பான்பூச்சிக் கூடு, சாலையில் உடைந்துள்ள இரண்டு மின்விளக்குக் கம்பங்கள் ஆகியவைத் திரு லோ குறிப்பிட்ட சில பிரச்சினைகள்.
புக்கிர் பர்மாய் பறவை அரங்கில் பலர் கூடுவதால் அங்குள்ள மின்விளக்குகளும் மின்விசிறிகளும் இரவு 10.30 மணி வரை செயல்படும்படியும் திரு லோ கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தின்போது முன்வைத்த மூன்று முக்கிய பரிந்துரைகளையும் திரு லோ தமது கடிதத்தில் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்குக் கட்டாய சிறைத் தண்டனை விதிப்பது, கல்வியமைச்சின் நிதியாதரவுக்கான தகுதி வரம்பை $3,000யிலிருந்து $5,000க்கு உயர்த்துவது, கழக வீடுகளுக்கு விண்ணப்பம் செய்யும் தனியாருக்கான வயது வரம்பைக் குறைப்பது ஆகியவை திரு லோ முன்வைத்த பரிந்துரைகள்.

