இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள், நாடாளுமன்றத்தில் மாற்றுக் குரல்களாக விளங்குவதற்காக நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக (என்.எம்.பி.) மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று சேனல் நியூஸ் ஏஷியாவின் (சிஎன்ஏ) செய்தி கூறுகிறது.
புதன்கிழமை (அக்டோபர் 29), முன்னாள் ராடின் மாஸ் தனித் தொகுதி சுயேச்சை வேட்பாளர் டேரில் லோ, தனது வேட்புமனுவுக்குத் தேவையான ஆவணங்களை இணையம் வழி சமர்ப்பித்ததாகக் கூறினார். அவர் தனது விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு பெற்ற உறுதிப்படுத்தல் மின்னஞ்சலின் நகலை சிஎன்ஏவிடம் காட்டினார்.
நியமன எம்.பி. குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அதே தேர்தலில் மவுண்ட்பேட்டன் தனித் தொகுதியில் போட்டியிட்ட திரு ஜெரமி டான், நவம்பர் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு முன்னதாகவே தமது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
2025ஆம் ஆண்டு தேர்தலில் இந்த இருவரும் பலரது கவனத்தை ஈர்த்தனர். ராடின் மாஸ் தொகுதிக்கு நடந்த மும்முனைப் போட்டியில் திரு லோ 23.52 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) மெல்வின் யோங் அதிக வாக்குகளைப் பெற்று வென்றார்.
திரு டானைப் பொறுத்தவரை, மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி தேர்தலில், வெற்றி பெற்ற மசெகவின் புதிய முகமான கோ ஸீ கீயை எதிர்த்து, அவர் 36.18 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறை அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்கள் நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் தலைமையிலான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புத் தேர்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
நவம்பர் 6ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் பெறப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் சிறப்புத் தேர்வுக் குழு பரிசீலிக்கும்.

