ஒரு சுதந்திர நாடு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பது மிகவும் அவசியமானது என்றும் தற்போதைய உலகச் சூழல் மாறிவரும் நிலையில், அதை நாம் மறுஉறுதிசெய்ய வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ஆயுதப் படைகள் பயிற்சிக் கழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 15) நடந்த புதிய ஆணை பெறும் அதிகாரிகள் அணிவகுப்பில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு கூறினார். வர்த்தகம் வளம் பெறுவது, உலகமயமாவது, உலகப் பொருளியல்கள் ஒன்றோடு ஒன்று இணைவது போன்றவை உருவாகக் காரணமாக இருந்த பாதுகாப்பான பின்னணி தற்போது மாறியிருப்பதாக அமைச்சர் விளக்கினார்.
“தேசியவாதம், தன்னைப்பேணித்தனம் போன்றவை அதிகரித்துள்ளது. அத்துடன், புதிய அமெரிக்க அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தமட்டில் மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.
“உலகில் சிங்கப்பூர் வெற்றி பெற வேண்டுமானால், நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அத்துடன், கூடுமானவரை நாம் உலகில் பல நாடுகளுடன் நட்புடன் இருக்க வேண்டும், நம்மை நாம்தான் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று சுதந்திரம் பெற்றவுடன் உறுதிபூண்டோம். இந்த உறுதிப்பாட்டை முன்னெப்போதையும்விட தற்பொழுது நாம் மறுஉறுதி செய்துகொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் ஓங் விளக்கினார்.