தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவும் ஆசியானும் பொருளியல்சக்தியாக உருவாகலாம்: ஜெய்சங்கர்

2 mins read
03de00c8-2625-48bc-8de9-75e688ad142d
சிங்கப்பூர் வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) சந்தித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

இந்தியாவும் ஆசியானும் இணைந்து உலகின் பொருளியல் சக்தியாக உருவாக முடியும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் ஆசியானும் பெருமளவு மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றன. ஒன்று மற்றதன் தேவைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் அனைத்துலக பொருளியலில் பெரிய உற்பத்தி சக்தியாக உருமாற முடியும் என்றார் அவர்.

உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் ஆசியானிலும் இந்தியாவிலும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாள் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ள திரு ஜெய்சங்கர், ஆசியான்-இந்தியா சிந்தனையாளர் வட்ட மேசை மாநாட்டில் உரையாற்றினார்.

தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிக அவசியம் என்று வலியுறுத்திய அவர், உணவு, சுகாதாரப் பாதுகாப்பு, இவ்வட்டாரம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள் குறித்து எடுத்துரைத்தார்.

ஆசியான் என்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பில் புருணை, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

“நமது பயனீட்டாளர்களின் தேவை, வாழ்க்கைப் பாணி நடைமுறைகளே பொருளியலுக்கு உந்து சக்திகளாக விளங்குகின்றன.

“வர்த்தகம், சுற்றுலா, கல்வி போன்றவற்றை மேம்படுத்தும்போது சேவைகளும் தொடர்புகளும் வலுப்படுகின்றன. இதன் தொடர்பிலான நமது முயற்சிகள் இவ்வட்டாரத்தையும் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“தற்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்ள இருதரப்பு ஒத்துழைப்பு மிக முக்கியம். பருவநிலை மாற்ற நிகழ்வுகளின் யுகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் உலகளாவிய தொற்றுநோய் அனுபவத்தில் சுகாதாரப் பாதுகாப்பிற்குத் தயாராவதும் மிக அவசியம்,” என்று அமைச்சர் சொன்னார்.

மியன்மார் போன்ற நாடுகள் பகிர்ந்துகொள்ளும் வட்டாரத்தில் அரசியல் சவால்கள் இருக்கும் என்று கூறிய அவர், இந்தியாவும் ஆசியானும் கூட்டாக இவற்றைச் சமாளிக்க முடியும என்றார்.

இந்தியாவிற்கும் ஆசியானுக்கும் இடையிலான பிணைப்பு ஆழமான கலாசாரத்திலும் குடிமக்கள் தொடர்பிலும் வேரூன்றியுள்ளது. அதற்கு தனி மதிப்பு இருக்கிறது. இந்தியா-ஆசியான் பங்காளித்துவம் தற்போது நாற்பதாவது ஆண்டுகளில் இருக்கிறது. இருதரப்பு, முத்தரப்பு பங்கேற்பு நமது நெருக்கத்துக்கு பங்களித்துள்ளது என்று அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.

ஆசியான்-இந்தியா ஒத்துழைப்புடன் பல சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆசியான்-இந்தியா ஒத்துழைப்புடன் பல சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார். - படம்: இந்திய ஊடகம் (பிடிஐ)
குறிப்புச் சொற்கள்