தாய் - சேய் நல மேம்பாட்டில் இந்தியா - சிங்கப்பூர் ஒத்துழைப்பு

2 mins read
63dd7202-fcf3-413f-a59c-a282f7f63fe4
சென்னை எழும்பூர் பகுதியிலுள்ள சுகாதார, குடும்பநலப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற தாய் - சேய் நலச் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம்கட்ட நிறைவு விழாவில் தமிழ்நாட்டின் மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், சென்னையிலுள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் டான் யி ஹாவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். - படம்: சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம்

தாய்-சேய் நலச் சேவைகளை மேம்படுத்துதல் தொடர்பில் சிங்கப்பூர் இந்தியாவுக்கு இடையிலான பத்தாண்டுகால ஒத்துழைப்பின் இரண்டாம் கட்ட திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் முன்னெடுத்துள்ள இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிறைவு விழா சென்னை எழும்பூர் பகுதியிலுள்ள சுகாதார, குடும்பநலப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாட்டின் மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், சென்னையிலுள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் டான் யி ஹாவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (Singapore International Foundation), சிங்ஹெல்த், தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார, நோய்த்தடுப்பு மருத்துவத் துறை இணைந்து மேற்கொண்ட இத்திட்டம் தமிழகம் முழுதும் மருத்துவத் திறன்களை வலுப்படுத்தியதுடன், ஆயிரக்கணக்கான தாய்மார்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பையும் மேம்படுத்தியது.

இத்திட்டம் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கிய இதன் இரண்டாம் கட்டத்தில், கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, சிங்ஹெல்த் பலதுறை மருந்தகம் ஆகியவற்றைச் சேர்ந்த சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத் தொண்டூழியர்கள் தமிழகம் சென்று பயிலரங்குகளை நடத்தினர்.

தாய்-சேய் மருத்துவம் தொடர்பில் மருத்துவத் திறன்கள், தொழில்நுட்ப வழிகாட்டுதல், சேவைகளை மேம்படுத்தும் நெறிமுறைகள் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கிய இப்பயிலரங்கில் மருத்துவர்கள், தாதியர், சுகாதார வல்லுநர்கள் உள்ளிட்ட 144 பேர் பங்கேற்றனர்.

‘பயிற்றுநர்களுக்குப் பயிற்றுவித்தல்’ இந்த இரண்டாம் கட்ட முன்னெடுப்புகளின் முக்கிய அம்சமாக இருந்தது. பங்கேற்பாளர் குழுவிலிருந்து 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்றுநராகப் பயிற்சி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படும் திறன்கள் கிட்டத்தட்ட 20,000 தாய்-சேய்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம், அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதில் கொண்டிருக்கும் அனைத்துலக ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுவதாகச் சொன்னார் சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி கொரின்னா சான்.

“சிங்கப்பூரையும் தமிழ்நாட்டையும் சேர்ந்த சுகாதார நிபுணர்களை ஒன்றிணைப்பதன் மூலம், மருத்துவத் திறன்களை வலுப்படுத்தியதுடன், மக்களிடையேயான நட்பையும் பிணைப்பையும் ஆழப்படுத்தியுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

“இந்தத் திட்டத்தின்மூலம் நடைபெறும் அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்ப வழிகாட்டுதல் ஆகியவை, தாய்-சேய் நலன் தொடர்பான சவால்களை நிர்வகிப்பதற்கான நம்பிக்கையையும் திறனையும் பெரிதும் மேம்படுத்தியுள்ளன.

“தமிழ்நாடு முழுவதும் தாய்-சேய் நலச் சேவைகளின் தரத்தையும் அணுகுதன்மையையும் மேம்படுத்தும் இந்தப் பங்காளித்துவம் தொடர்வதை எதிர்நோக்குகிறோம்,” என்று தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார, நோய்த்தடுப்பு மருத்துவ இயக்குநர் டாக்டர் ஏ சோமசுந்தரம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்