அமெரிக்காவிலும் சீனாவிலும் நடக்கும் உள்ளூர் அரசியல்தான் அனைத்துலக அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றும், இந்நிலை மாற மற்ற நாடுகள் ஒன்றிணைந்து வலுவான சக்தியை உருவாக்க வேண்டும் என்றும் இந்தியா-சிங்கப்பூர் பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார் தெற்காசிய கல்விக் கழகத்தின் வருகைதரு ஆய்வுப் பேராசிரியர் சி ராஜா மோகன்.
அமெரிக்கா - சீனா உறவு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று பலர் விரும்பினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் தெற்காசிய கல்விக் கழகமும் இணைந்து நடத்திய ‘இந்தியா-சிங்கப்பூர்: நிலையான எதிர்காலம்’ என்ற கலந்துரையாடலின் முதல் அங்கத்தில் இவர் உரையாற்றினார்.
அமரா ஹோட்டலில் ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை, சிறப்புரையை அடுத்து, பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கலந்துரையாடினர்.
‘இந்தியா-சிங்கப்பூர் பங்காளித்துவம்: எதிர்காலம் எப்படிப்பட்டது?’ என்ற தலைப்பில் முதல் குழு கலந்துரையாடியது. இவ்வுரையாடலை தெற்காசிய கல்விக் கழக இயக்குநர் இணைப் பேராசிரியர் இக்பால் எஸ் செவியா வழிநடத்தினார்.
எதிர்காலத்தில் இளைய தலைமுறையின் முக்கியத்துவத்தை விளக்கினார் வர்த்தக, தொழில் அமைச்சின் இந்திய இயக்கத்தின் இயக்குநர் குமாரி சான் கா மெய்.
“சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் இருக்கும் இளையர்கள் ஒன்றிணைந்து பணிபுரியவும் அவர்களுக்கிடையே நட்புறவை வளர்ப்பதும் சவாலாக அமையலாம்,” என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவுச் சூழலில் இருநாட்டு உறவுகள் குறித்து இரண்டாவது உரையாடலில் பேசப்பட்டது. சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் இயக்குநரும், ஏஐ சிங்கப்பூர் அமைப்பின் துணை நிர்வாக தலைவருமான பேராசிரியர் மோகன் எஸ் கன்கன்ஹல்லி அவ்வுரையாடலை வழிநடத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“இன்று பரவலாக பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்டவை. செயற்கை நுண்ணறிவில் இந்திய மொழிகள், குறிப்பாக தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்,” என்று செயற்கை நுண்ணறிவில் நம் மொழியின் முக்கியத்துவம் பற்றிப் பேசியபோது ‘இன்னவேஷன் ஏஐ சிங்கப்பூர்’ இயக்குநர் லாரன்ஸ் லியூ வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எரிசக்தியைப் பற்றியும் இந்திய ராணுவம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதைப் பற்றியும் இந்திய இணைய நிதியின் நிர்வாகப் பங்காளி அனிருத் சூரி தமது கருத்துகளை முன்வைத்தார்.
சிங்கப்பூர் எப்போது ஆசியாவின் அடுத்த ‘சிலிக்கான் வேலி’யாக உருமாறப்போகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. “அவ்வாறு உருமாறுவதற்கான அவசியம் சிங்கப்பூருக்கு இல்லை. நல்லாட்சி, முற்போக்குச் சிந்தனையோடு செயல்படும் திறன் எனச் சிங்கப்பூருக்குச் சில பலங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவையும் வினையூக்கியாக்கி, நம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் இரு நாடுகளும் செயல்படுவது அவசியம்,” என்றார் ‘ஏஐ வெரிஃபை’ அறநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷமீக் குண்டு.
செயற்கை நுண்ணறிவுமீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வளர்த்தல், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் கருத்துப் பரிமாற்றம் போன்ற கூறுகளும் கலந்துரையாடலில் பரவலாக இடம்பெற்றன.