சிங்கப்பூர் விண்வெளி உச்சநிலை மாநாட்டில் இந்தியா

சிங்கப்பூர் விண்வெளி உச்சநிலை மாநாட்டில் இந்தியா

2 mins read
e50516ff-1464-4ffe-bdb2-e75b6bb83a26
எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங்குடன் (நடுவில்) இந்தியக் குழுவினர். - படம்: சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம்

சிங்கப்பூர் விமானக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற முதலாவது சிங்கப்பூர் விண்வெளி உச்சநிலை மாநாட்டில் இந்தியா ஒரு பங்காளி நாடாகப் பங்கேற்றது.

அந்த மாநாட்டில் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு, அங்கீகார மையத்தின் தலைவர் டாக்டர் பவன் கோயெங்கா, எட்டு இந்திய விண்வெளித் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய இந்தியத் தூதுக் குழுவிற்குத் தலைமையேற்றார்.

இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு, அங்கீகார மையம் தனியார் நிறுவனங்களின் அனைத்து விண்வெளித் துறை நடவடிக்கைகளையும் கையாளும் ஓர் அரசு அமைப்பாகும்.

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைப் பொருளியலை மேம்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

இம்மாதம் 23ஆம் தேதிவரை நடைபெறும் இந்த மாநாடு சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு, அங்கீகார மையம், விண்வெளி உச்சநிலை மாநாட்டில் ‘இந்தியா அரங்கம்’ ஒன்றை அமைத்து இந்திய விண்வெளித் துறை நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகளைக் காட்சிப்படுத்தியது.

எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் பிப்ரவரி 2ஆம் தேதியன்று அந்த அரங்கத்தைப் பார்வையிட்டார்.

டாக்டர் பவன் கோயெங்காவைச் சந்தித்த அமைச்சர் டான், இந்தியா - சிங்கப்பூர் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கியத் துறையாக உருவெடுத்துள்ள விண்வெளித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.

மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் பவன் கோயெங்கா, இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி மற்றும் இலக்குகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஜப்பான், மாலத்தீவு, பிலிப்பீன்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளின் விண்வெளி அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்