தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் மாநாடு

2 mins read
8ad24a48-4f29-429a-bb7e-4067d0cef926
17வது ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாடு இவ்வாண்டு ஜனவரியில் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்டது. - கோப்புப்படம்: பிடிஐ

புவனேஸ்வர்: உலகமெங்கும் இருக்கும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரைக் கொண்டாடும் வகையில் இந்தியாவில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ எனும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்திய அரசாங்கத்துடனான வெளிநாட்டு இந்தியச் சமூகத்தின் ஈடுபாட்டை வலுப்படுத்தி, கலாசார வேர்களுடன் அவர்களை மீண்டும் இணைக்கும் முக்கிய நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மகாத்மா காந்தி திரும்பியதை ஜனவரி 9 நினைவுகூர்கிறது. இந்த நாளைக் குறிக்கும் வகையில் ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாட்டை ஏற்பாடு செய்வது 2003ல் தொடங்கியது.

அடுத்த ஆண்டு ஜனவரி 8லிருந்து 10ஆம் தேதிவரை 18வது முறையாக இந்த மாநாடு ஒடிசா மாநிலத்தில் நடைபெறுகிறது. ‘விக்சித்’ பாரதத்திற்குப் பங்களிக்கும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர்’ என்பதே எதிர்வரும் மாநாட்டின் கருப்பொருளாகும்.

ஒடிசாவின் புவனேஸ்வரில் இடம்பெறவிருக்கும் மாநாட்டில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 5,000 பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மாநாட்டில் கலந்துகொள்வோருக்கு ஏராளமான நிகழ்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

30க்கும் மேற்பட்ட கண்கவர் சுற்றுலாத் தளங்கள், இசை நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சி, அனைத்துலக ஒடிசி நடன நிகழ்ச்சி, பழங்குடியினர் கண்காட்சி போன்ற அம்சங்கள் அவற்றில் அடங்கும்.

சிங்கப்பூருக்கும் ஒடிசாவுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு தொடர்பான கொள்கைக் கட்டமைப்புகள் மாநாட்டில் கலந்துரையாடப்படும். கலந்துகொள்பவர்களுக்கு போக்குவரத்து, தங்கும் வசதிகள் அமைத்துத் தரப்படும்.

தொடர்புடைய செய்திகள்

மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் https://pbdindia.gov.in/ எனும் இணையத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

ஒடிசா செல்கிறார் அதிபர் தர்மன்

இவ்வேளையில், சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் 2025 ஜனவரியில் இந்தியா செல்லும்போது ஒடிசாவிற்கும் செல்வார் என்று இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தெரிவித்துள்ளார்.

அதிபரின் இப்பயணம், சிங்கப்பூர் - ஒடிசா இடையிலான பொருளியல், பண்பாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் இருதரப்பு வளர்ச்சி, ஒத்துழைப்பிற்கான புதிய கதவுகள் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்பதாக ஒடிசா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஈராண்டுகளுக்கு ஒருமுறை ஒடிசாவில் நடத்தப்படும் முதலீட்டாளர் மாநாட்டில் முதல் பங்காளி நாடாக இணைய சிங்கப்பூர் இணக்கம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் அடுத்த முதலீட்டாளர் மாநாடு ஜனவரி 28, 29ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்