லிட்டில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த திரைப்பட கலைஞர் எஸ்.ஜே. சூர்யாவைக் காண திங்கட்கிழமை (மார்ச் 6) மக்கள் திரண்டனர்.
சிங்கப்பூர் ரசிகர்கள் அவர்மீது பேரன்பு பொழிந்தனர். முன்கூட்டியே அவரது வருகை குறித்து கேள்விப்பட்ட ஒரு சிங்கப்பூர் மலாய் ரசிகர் தன்னை சமூக ஊடகம் வாயிலாக தொடர்புகொண்டு, அவரைக் காணும் வாய்ப்பைத் தவறவிட்டதில் வருத்தம் தெரிவித்ததாக குறிப்பிட்டார் எஸ்.ஜே சூர்யா.
'மாநாடு' திரைப்படத்தில் இடம்பெறும் பிரபல தமிழ் வசனத்தை அவ்விளம் ரசிகர் நடித்துக்காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. அக்காணொளி தன் மனதைத் தொட்டதாக அவர் கூறினார்.
இவ்வகையில், இயக்குநராக இருந்த காலத்தில் தொடங்கி, நடிகராகவும் இசையமைப்பாளரகவும் பரிமாணம் கண்டது வரை அதிக வரவேற்பு தந்துள்ள சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார், தமிழ் முரசிடம் பேசிய எஸ்.ஜே. சூர்யா.
அண்மையில் வெளிவந்து திரையுலகின் பாராட்டைப் பெற்ற 'வதந்தி' எனும் இணையத் தொடரில் அவர் நடித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமேசான் பிரைமின் ஆக பிரபல தொடராக சிங்கப்பூரில் அது உயர்ந்ததையும் குறிப்பிட்டு, தனது வெளிநாட்டு ரசிகர்களில் சிங்கப்பூர் மக்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டில் எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்-ஜோதிகா நடித்திருந்த 'குஷி' திரைப்படம் வெளியானது. சிங்கப்பூர் மக்களிடையே அதன் வரவேற்பைக் காண இங்கு நேரடியாக வந்த எஸ்.ஜே. சூர்யா, அப்போது உள்ளூர் திரையரங்குகளுக்குச் சென்றிருந்தார். அதை தொடர்ந்து, அவர் சிங்கப்பூருக்கு வருவது இது நான்காவது முறை.
தற்போது திரைத்துறையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. பொம்மை, மார்க் ஆண்டனி, இயக்குநர் சங்கரின் ஆர்சி15 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
2015ல் வெளிவந்த 'இசை' திரைப்படத்துக்குப் பின்னர் நடிப்பில் முழு வீச்சாக இறங்கிய எஸ்.ஜே. சூர்யா மீண்டும் 'கில்லர்' திரைப்படம் மூலம் இயக்கத்திற்கும் திரும்புகிறார். திரைப்பட நடிகராவது எஸ்.ஜே. சூர்யாவின் நீண்டநாள் கனவாக இருந்து வந்துள்ளது, அதாவது, அவர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்தே.
தொடர்புடைய செய்திகள்
இதனைப் பல்வேறு இடங்களில் வலியுறுத்தி உள்ள அவர், எல்லாப் பரிமாணங்களையும்விட நடிகர் எனும் பரிமாணமே மனதுக்கு நெருக்கமானது என தெரிவித்தார்.
"நடிகராவதற்கு உகந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் அமைவது முக்கியம். அவை அமையாத காரணத்தினால் நானே இப்பரிமாணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது," என்றார் அவர்.
எஸ். ஜே. சூர்யா இயக்குநராக உருவெடுத்த முதல் படம், அஜித்-சிம்ரன் நடித்து 1999ல் வெளிவந்த வாலி. இப்படத்துக்கான இந்தி மொழி உரிமைகளைப் பெற தயாரிப்பாளர் போனி கபூர் முயற்சி செய்த சமயத்தில், எஸ்.ஜே. சூர்யா சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பார் எனும் வதந்தி நிலவியது.
அவரின் சொந்த இயக்கத்தில் வாலியின் இந்தி மொழி மறுபதிப்பை எதிர்பார்க்கலாமா எனும் கேள்விக்கு சாத்தியமுண்டு என்றளவில் பதில் அளித்தார் எஸ்.ஜே. சூர்யா.

