சிங்கப்பூரில் இந்தியச் சமூகம் சிறிதாக இருந்தாலும் நாட்டின் மீதான அச்சமூகத்தின் தாக்கமும் பங்களிப்பும் பெரிது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் இந்தியச் சமூகம் முழுமையாகப் பங்காற்றி, பல வழிகளில் பிற சமூகங்களுடன் சேர்ந்து செயல்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
“சிறுபான்மைச் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் முழுமையான, சமநிலையான வாய்ப்புகள், ஒற்றுமையான சமுதாயம், அனைவருக்குமான நல்ல வாழ்க்கை ஆகியவற்றை உருவாக்கிய நம் பல்லினச் சமூகத்தின் வெற்றியை இது வெளிப்படுத்துகிறது,” என்று திரு லீ கூறினார்.
2004 முதல் 2024 வரை சிங்கப்பூரின் பிரதமராக இருந்த திரு லீக்காக சனிக்கிழமை (ஜனவரி 11) மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடந்த சமூகப் பாராட்டு இரவு விருந்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
மக்கள்தொகையையும் திறனாளர்களையும் அதிகரிப்பதற்கு குடியேறிகளையும் வெளிநாட்டு ஊழியர்களையும் சிங்கப்பூர் அதிகம் சார்ந்திருப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.
“எனவே, நாம் புதிய வரவுகளின் வருகையையும் ஒருங்கிணைப்பையும் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் சமாளிக்க வேணடும். வரவுகள் சமநிலையாகவும் நீடித்த நிலைத்தன்மையுடனும் இருப்பதை இது உறுதிசெய்யும். இருந்தபோதும், அகச்சார்புடைமையையும் (nativism) வெளிநாட்டினருக்கு எதிரான பாகுபாட்டு உணர்வையும் நாம் உறுதியாக எதிர்த்து நிற்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.
புதிதாக சிங்கப்பூருக்குக் குடியேறுபவர்கள் சமூகத்திற்கும் நமது சமூக வழக்கங்களுக்கும் உணர்வுகளுக்கும் தகவமைத்துக்கொள்ள நாம் உதவவேண்டும் என்றும் திரு லீ வலியுறுத்தினார்.
“ஆண்டுகளும் தலைமுறைகளும் செல்லச் செல்ல, புது வரவுகள் உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணைவர். இப்படித்தான் முன்னைய தலைமுறையினர் சிங்கப்பூர் இந்தியர்களாக மாறினர். புதியவர்களின் வரவுடன் இந்தத் தலைமுறையினரும் இது மீண்டும் நடக்கும்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அனைவரும் பகிரும் சிங்கப்பூர் அடையாளத்தை இவ்வாறு கட்டிக்காத்து செறிவூட்ட முடியும் என்று கூறிய திரு லீ, பன்முகத்தன்மையால் பிளவுபடாமல் வலுவாகும் ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குவதற்கு இது வழி என்றார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குத்துவிளக்கேற்றிய திரு லீ, மேளதாளங்களுடனும் பலத்த கரவொலியுடனும் வரவேற்கப்பட்டார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), மக்கள் கழக நற்பணிப் பேரவை, தமிழர் பேரவை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் என 15 சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்தனர். 230 மேசைகளில் 2,000க்கும் அதிகமானோர் நிரம்பிய இந்நிகழ்ச்சியில் செவ்விசை நிகழ்ச்சியும் ‘சிங்கை நாடு’ பாடலும் படைக்கப்பட்டன.
திரு லீக்கு புகழாரமாக உருவாக்கப்பட்ட காணொளித் தொகுப்பு காண்பிக்கப்பட்டது. பிறகு, அவருக்கு யானைச் சிற்பங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சிண்டாவுக்கும் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்கும் தலா $150,000 நன்கொடையும் வழங்கப்பட்டது.
உணர்வுகளை வாரிப்பொழிந்த சமூகத்தினரால் மனம் உருகிவிட்டதாக உரையின்போது கூறிய திரு லீ, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியச் சமூகத்தினர் தமக்கு ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார். தமது பதவிக்காலத்தில் சிங்கப்பூர் சாதித்தவற்றுக்கு தனியார், பொதுத் துறையினர், சமூகத்தினர் எனப் பலரது ஆதரவும் உழைப்பும் காரணம் என்றார் அவர்.
சிண்டா, நற்பணிப் பேரவை உள்ளிட்ட சமூக அமைப்புகளால் இந்தியச் சமூகம் பயனுறுவதாகக் குறிப்பிட்ட திரு லீ, தன்னலமற்ற, சமூக உணர்வுமிக்க தனிநபர்கள் பலரால் இந்த அமைப்புகள் நற்பணிகளைச் செய்ய முடிவதாகப் பாராட்டினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அதன் ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.ரவீந்திரன் ‘நன்றி மறவேல்’ என்ற அடிப்படைப் பண்பில் அனைவரும் இங்கு கூடிய மூத்த அமைச்சர் லீக்கு நன்றி நவின்றார்.
‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்’ என்ற திருக்குறளுடன் உரையை முடித்தபோது, கூடியிருந்தோருடன் திரு லீ எழுந்து நின்று நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் நிகழ்ச்சி குறித்து பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், இந்தியச் சமூகத்திற்காக திரு லீ செய்திருப்பதை இச்சமூகம் எப்படிக் காண்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
“இந்தியச் சமூகத்தைப் பற்றி அவர் நினைத்து பல்லாண்டுகளாக அதுகுறித்த தமது பார்வைகளைப் பகிர்ந்துள்ளார். இந்தியச் சமூக நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று அரசியல், சமூகக் கட்டமைப்பில் இந்தியர்களுக்கும் இடமிருப்பதை அவர் உறுதிசெய்தார்,” என்றார் திரு சண்முகம்.

