பலரது வாழ்க்கையைத் தூக்கி நிறுத்திய இந்தியப் பொருளியல், புத்தாக்கத்துடன் துடிப்புமிக்க மையமாகத் திகழ்வதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) நடைபெற்ற இந்தியாவின் 77வது குடியரசு தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது திருவாட்டி டியோ இவ்வாறு கூறினார்.
“1996 முதல் இந்தியாவில் நிகழ்ந்துள்ள பல்வேறு மாற்றங்களை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். நான் கடைசியாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டது கடந்த ஆண்டு. மூன்றாவது முறையாக நடந்த இந்தியா - சிங்கப்பூர் வட்டமேசைச் சந்திப்பில் அப்போது பங்கேற்றேன். செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க அடுத்த மாதம் இந்தியா செல்லவிருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் உருமாற்றத்திற்கு ஒத்திசைவாக வளர்ந்துள்ள சிங்கப்பூர் - இந்திய உறவு, அமைப்பு ரீதியான துடிப்புமிக்க இணைப்புகளையும் இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள வலுவான உறவுகளையும் அடித்தளமாகக் கொண்டுள்ளதாகவும் திருவாட்டி டியோ சொன்னார்.
“இருநாட்டு வணிகம் 2005லிருந்து இரண்டு மடங்கிற்குமேல் வளர்ந்துள்ளது. அத்துடன், 2018 முதல் இந்தியாவின் ஆகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகச் சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகளில் கிட்டத்தட்ட கால்பங்கு சிங்கப்பூரின் பங்களிப்பாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
2025ல் சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்திற்கான (Comprehensive Strategic Partnership) வழிகாட்டித் திட்டத்திற்கு இணங்கியதை திருவாட்டி டியோ சுட்டினார்.
“பிரதமர் வோங் தமது பயணத்தின்போது கூறியபடி, இருநாட்டு உறவில் ஏற்பட்டுள்ள மேம்பாடு பெயரளவில் மட்டுமன்று. நிலையற்ற உலகப் பொருளியல் சூழலில், நம் நாடுகளின் பங்காளித்துவத்தை உறுதிப்படுத்துவது, பொருள்மிகுந்த, நீண்டகாலக் கடப்பாடாக உள்ளது. நமது ஒத்துழைப்பின் அடுத்தகட்டத்திற்கு இது, முற்போக்கான கட்டமைப்பாக உள்ளது,” என்று அமைச்சர் டியோ கூறினார்.
சென்னையில் தேசிய உன்னத நிலையத்தை (Centre of Excellence) அமைப்பதற்காகச் சிங்கப்பூர், இந்தியாவுடன் பங்காளித்துவத்தில் இணைவதாகக் குறிப்பிட்ட அவர், மேல்நிலை உற்பத்தித் துறையில் திறன் மேம்பாட்டின்மீது கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியாவில் மாநில அளவிலும் திறன் மேம்பாட்டு நிலையங்களை அமைத்து விமானப் பராமரிப்பு, பகுதி மின்கடத்தித் துறை உள்ளிட்ட துறைகளின் தேவைகளை எட்ட நாங்கள் இந்தியாவுடன் செயல்படவுள்ளோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர், இந்தியத் துறைமுகங்களுக்கு இடையே கப்பல்கள், பசுமை எரிபொருள்கள் ஆகியவற்றின் நகர்வை ஆதரிக்க, ‘பசுமை, மின்னிலக்கக் கடல்துறைத் தடம்’ ஒன்றை அமைக்க இரு நாடுகளும் மேற்கொண்ட ஒப்பந்தத்தையும் திருவாட்டி டியோ சுட்டினார்.
“தனியார் துறையில், நவி மும்பையிலுள்ள ‘பிஎஸ்ஏ பாரத் மும்பைக் கொள்கலன் முனையத்தை’ (PSA Bharat Mumbai Container Terminal) அமைப்பதற்கான இரண்டாவது கட்டத் திட்டத்தைத் துறைமுகச் சேவை ஆணையம் தொடங்கியுள்ளது. இந்தியாவின் சரக்குக் கையாளும் ஆற்றலில் 25 விழுக்காட்டை அந்தத் துறைமுகம் கையாளும்,” என்று அவர் கூறினார்.
விண்வெளித்துறையிலும் ஒத்துழைப்பு விரிவடையும் என்ற அமைச்சர் டியோ, இதுவரையில் சிங்கப்பூர் தயாரித்துள்ள 20க்கும் அதிகமான செயற்கைக்கோள்கள் இந்தியாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
வட்டார அளவில் சிங்கப்பூர், ஆசியான் வழியாக இந்தியாவுடன் அணுக்கமாகத் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் சொன்னார்.
“2027ல் ஆசியானுக்கான தலைமையைச் சிங்கப்பூர் ஏற்கத் தயாராகவுள்ள நேரத்தில், ‘ஆசியான் - இந்தியா பரந்த உத்திபூர்வ பங்காளித்துவத்தையும்’ மேம்படுத்த நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.”
“உலகில் ஆக அதிக வளர்ச்சி காணும் இடங்களான ஆசியானும் இந்தியாவும் இந்த ஒத்துழைப்பால் அதிக பலன் அடைகின்றன. இந்தப் பங்காளித்துவத்தை ஆழப்படுத்த புதிய வழிகளை ஆராய வேண்டும். குறிப்பாக, வர்த்தகம், இணைப்புகள், மின்னிலக்க மற்றும் பசுமைப் பொருளியல்களில் கவனம் செலுத்த வேண்டும்,” என்றும் திருவாட்டி டியோ கூறினார்.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே, இந்தியா மீது சிங்கப்பூர் கொண்டுள்ள நம்பிக்கை புதிதன்று என்று சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த ஆண்டு இந்திய ஊடகத்திடம் தெரிவித்திருந்ததை நினைவுகூர்ந்தார்.
“சிங்கப்பூர்-இந்திய உறவு நெடுங்காலமானது, செயல்திறன்மிக்கது. நம் பங்காளித்துவம் பகிரப்பட்ட விழுமியங்களில் வேர்கொண்டது; இருதரப்பு நலன் சார்ந்தது; அமைதி, முன்னேற்றம், வளப்பம் ஆகியவற்றை அடையும் பொதுவான நோக்கத்தால் முன்னெடுக்கப்பட்டது,” என்று டாக்டர் அம்புலே கூறினார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்லின் சென், தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செஸியாங் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வருகையளித்தனர். அத்துடன், வர்த்தகர்கள், சமூகத் தலைவர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து, கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

