நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தைச் சந்தித்த இந்திய ஊழியர்; ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிறுவனம்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தைச் சந்தித்த இந்திய ஊழியர்; ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிறுவனம்

படம்: பொலிசம்

17 Oct 2026 - 5:46 pm

2 mins read

இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்பரான ரசல் ஜெகதீஷுக்கு, 47, தனது நிறுவனத்தின் இவ்வாண்டு விருந்து, நடன நிகழ்ச்சி மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது.

அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் அவரது மனைவியும் இரு பிள்ளைகளும் மேடையில் எதிர்பாராமல் இணைந்தது அவருக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் அவர் தனது குடும்பத்தினரை நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை.

அவர் நிறுவனத்துக்கு ஆற்றிய பங்களிப்பையும் அன்புக்குரியவர்களைப் பிரிந்து அவர் செலவழித்த நேரத்தையும் அங்கீகரிக்கும் வகையில் ரசலின் நிறுவனமான பொலிசம் இந்த ஆச்சரியமான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பொலிசம், உள்ளூரின் பளுதூக்கி சேவை வழங்கும் நிறுவனமாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களைப் பாராட்டும் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு குடும்பத்தினரை நிறுவனம் கேட்டுக் கொண்டது.

ரசலின் மகன் தனது காணொளியில், தந்தையைச் சந்தித்து பல ஆண்டுகள் ஆனதாகவும் அவர் வீட்டிற்குத் திரும்பியதும் அவருடன் கால்பந்து விளையாட ஆவலாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்தக் காணொளியைத் தேர்ந்தெடுத்த பொலிசம் நிறுவன நிர்வாகிகள், ரசலின் மனைவி, இரு பிள்ளைகளை இந்தியாவின் கேரளாவிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கு ரகசியமாக ஏற்பாடு செய்தனர்.

குடும்பத்தினருடன் ரசல் நேரத்தைச் செலவழிப்பதற்காக விமானக் கட்டணம், நான்கு நாள் மூன்று இரவுகள் தங்குவதற்கான செலவுகளையும் நிறுவனமே ஏற்றுக் கொண்டது.

விருந்து நிகழ்ச்சியில், தனது ஊழியர்களுக்குப் பரிசு வழங்கும் வகையில் ஒரு சவாலையும் நிறுவனம் நடத்தியது. அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சேகரிக்கப்பட்ட 10 வெள்ளி நோட்டுகளை சரியாக எண்ண வேண்டும். இந்தப் போட்டியில் வெல்பவர்கள், அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அதில், 34 வயதான மூத்த செயல்பாட்டு நிபுணரான லீ கர் யூங், 13,810 வெள்ளி ரொக்கத்தைப் பெற்று வெற்றியாளரானார்.

சொந்தமாக ஒரு வீவக வீட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பதற்காக பணத்தை சேமித்து வரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியான லீ, இந்தப் பரிசுத் தொகை தனது கனவை நிறைவேற்றுவதற்கான முதல் படி என்று கூறினார்.

மற்றோர் ஊழியரான செயல்பாட்டு உதவியாளர் வின்னி சாங், 21, 12,400 வெள்ளியை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும் ஆறு போட்டியாளர்கள் தலா 1,200 வெள்ளி ரொக்கத்தை வென்றனர்.

ஏறக்குறைய 400 ஊழியர்களைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் மொத்தம் 150,000 வெள்ளிக்கும் மேற்பட்ட ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
வெளிநாட்டு ஊழியர்விருந்துவீவககுடும்பம்