சிங்கப்பூர் விநியோகத் துறையினருடன் வணிகப் பங்காளித்துவம் மேற்கொள்ளவும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்களைச் சென்றடையவும் இந்திய ஏற்றுமதித் துறையினருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், உணவுக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.
இந்திய ஏற்றுமதியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வது, அப்பொருள்களை விநியோகிப்பது போன்ற வகைகளில் இக்கண்காட்சி சிங்கப்பூர்ச் சில்லறை வர்த்தகர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
சிங்கப்பூரில் இந்தியப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் உதவும் வகையில் அமைந்த ‘உலகிற்கான இந்தியத் தயாரிப்புகள்’ (Produce of India for the World) எனும் இக்கண்காட்சி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் நடைபெற்றது.
புதிய, வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் நடைபெற்ற நான்காவது சிங்கப்பூர் - இந்தியா அமைர்ச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பின் ஓர் அங்கமாக இது இடம்பெற்றது.
வெளியுறவு, வர்த்தக, தொழில்துறை துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங், இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இருவரும் இக்கண்காட்சியில் பங்கேற்று, பல்வேறு வகை இந்திய உணவுப் பொருள்களைப் பார்வையிட்டனர்.
சிங்கப்பூர் வரத்தக, தொழில்துறை அமைச்சு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஃபேர்பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா பங்கேற்றார்.
ஆகஸ்ட் 17 முதல் 23ஆம் தேதிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 18 இந்திய ஏற்றுமதியாளர்களின் 160க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள், இயற்கை பாஸ்மதி அரிசி, ஆலிவ் இலைத் தேநீரில் தொடங்கி, பல்வேறு புதிய விளைபொருள்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், தென்கிழக்காசியா போன்ற சந்தைகளுக்கும் ஏற்கெனவே ஏற்றுமதி செய்துவரும் வர்த்தகர்களும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவின், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமும் (APEDA) ஃபேர்பிரைஸ் குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கண்காட்சி, இந்திய ஏற்றுமதியாளர்களின் தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், மாதுளை, நேந்திரம் வாழை உள்ளிட்ட பழங்களை ஏற்றுமதி செய்துவரும் சாய் வர்மா, 25, தமது பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்.
‘கோ-ஃபார்ம்’, ‘ஐக்ரோ’ இரு நிறுவனங்களின் இணை நிறுவனரான இவர், “பழங்கள் விரைவில் கெட்டுப்போவது வர்த்தகர்களை அதிகம் பாதிக்கிறது என்பதால், 15 ஆண்டுகால ஆய்வுக்குப் பின் ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம்.
“அதன்மூலம் பழங்கள் கெட்டுப்போகாமல் அவற்றை இங்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை ஆராய்கிரோம். அதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த தளமாக அமைந்துள்ளது,” என்றார்.
சிங்கப்பூரர்களான மங்கை சொக்கலிங்கம், தாளக்குடி குணசீலன் சண்முகம் கலைச்செல்வன் இருவரும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட காய்கறி, பழங்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
“இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு, சிங்கப்பூரில் உள்ள அனைத்து இனத்தவரும் பயன்படுத்த ஏதுவானவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளோம்,” என்று அவர்கள் கூறினர்.
விநியோகத் துறையினரையும், இந்திய வர்த்தகர்களையும் சந்தித்தது பயனுள்ள அனுபவம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இக்கண்காட்சியில், மேகாலயா மாநிலத்திலிருந்து முதன்முறையாக ஏற்றுமதியாகும் தூள் வகைகள், மகாராஷ்டிர மாநிலத்தின் பால் பொருள்கள், கோவில்பட்டி கடலை மிட்டாய், கலனில் அடைக்கப்பட்ட புரதச் சத்துள்ள குளிர்க் காப்பி, டெல்லியிலிருந்து வந்த இந்தியச் சுவையில் உள்ள ‘மயோனெஸ்’ உள்ளிட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


