தைத்திருநாளுக்குத் தயாராகிறது இந்திய மரபுடைமை நிலையம்

3 mins read
bea79ae3-034e-4dcd-a2a2-0a561f33dd50
வரும் ஜனவரி 10, 11, 17, 18ஆம் தேதிகளில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு இந்திய மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. - படம்: இந்திய மரபுடைமை நிலையம்

இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது இந்திய மரபுடைமை நிலையம்.

ஜனவரி 10, 11, 17, 18ஆம் தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

தைத்திருநாள் உணர்வைக் கொண்டாடும் கலாசார நடவடிக்கைகள், கைவினைப் பொருள்கள் உருவாக்கும் பயிலரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் பொதுமக்கள் ஒரு நாட்டுப்புற கிராமத்தின் சூழலையும் அழகையும் அனுபவிக்கலாம்.

சனிக்கிழமை (ஜனவரி 10) நடைபெறும் புள்ளிக் கோலம் பயிலரங்கில், பங்கேற்பாளர்கள் பாரம்பரிய அரிசி சார்ந்த பொருள்களைப் பயன்படுத்தித் தங்கள் தனிப்பட்ட புள்ளிக் கோல வடிவமைப்புகளை உருவாக்கலாம்.

அண்மையில் சமூக ஊடகங்களில் புகழ்பெற்றுவரும் அனுபவமிக்க கோலம், ரங்கோலிக் கலைஞர் ஜீவா இந்தப் பயிலரங்கை வழிநடத்துவார். பயிலரங்கில் கலந்துகொள்ள கட்டணம் ஒருவருக்கு $10.

அதே நாளில் பொங்கல் மரபுடைமைப் பாதை நடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் லிட்டில் இந்தியா வழியாக நடந்து சென்று பொங்கல் பண்டிகைக்கு வர்த்தகங்கள் தயாராகும் விதத்தையும் வீதிகளில் விறுவிறுப்பான பண்டிகைக்காலச் சூழலையும் காணலாம். ஆனந்தபவன் உணவகத்தில் கிராமிய பாணியிலான சைவ வாழை இலை மதிய உணவோடு அந்நிகழ்ச்சி முடிவடையும்.

இந்த நிகழ்ச்சிக்கான கட்டணம் ஒருவருக்கு $30.

பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு ‘மொங்கல் திருடிய பொங்கல்’ எனும் சுவாரசியமான கதை சொல்லும் அங்கமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நிலையத்தில் நடைபெறும். பொங்கல் பண்டிகையின் மரபு, அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியை சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து கலகலப்பான முறையில் அறிந்துகொள்ளலாம்.

இந்த அங்கத்தை வழிநடத்துகிறார் ‘மொங்கல் திருடிய பொங்கல்’ நூல் ஆசிரியர் அபி கிருஷ்.

இதில் பங்கேற்க ஒரு பெற்றோர்-பிள்ளை இணைக்குக் கட்டணம் $20.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தஞ்சாவூர் ஓவியப் பயிலரங்கு நடைபெறும்.

மிளிரும் வண்ணங்கள், நுணுக்கங்கள், மின்னும் தங்கப் படலங்களுக்குப் பெயர் பெற்ற தஞ்சை ஓவியங்கள் பற்றிக் கற்றுக்கொள்வதுடன் பங்கேற்பாளர்கள் தாங்களே உருவாக்கிய தஞ்சாவூர் ஓவியத்தை வீட்டிற்குக் கொண்டுசெல்லலாம்.

இந்தப் பயிலரங்கிற்கான கட்டணம் $25.

கட்டணம் செலுத்தவேண்டிய நிகழ்ச்சிகளைத் தவிர பல துடிப்பான, இலவச அங்கங்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிலையத்தில் நடைபெறவுள்ளன.

அடுத்த வார இறுதியில் (ஜனவரி 10, 11) பொங்கல் பண்டிகைச் சந்தை, மண்பானை செய்யும் நேரடி அங்கம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறும். அதே நாள்களில் சுவையான பொங்கல் தயாரிக்கும் அங்கமும் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.

இரு வாரயிறுதிகளில் மொத்தம் நான்கு நாள்களுக்குக் கலாசார நிகழ்ச்சிகள், சிறார்க்கான சுறுசுறுப்பான நடவடிக்கைகள், விளையாட்டுகள் என இந்திய மரபுடைமை நிலையம் தை மாதக் குதூகலத்தில் திளைத்திருக்கும்.
இரு வாரயிறுதிகளில் மொத்தம் நான்கு நாள்களுக்குக் கலாசார நிகழ்ச்சிகள், சிறார்க்கான சுறுசுறுப்பான நடவடிக்கைகள், விளையாட்டுகள் என இந்திய மரபுடைமை நிலையம் தை மாதக் குதூகலத்தில் திளைத்திருக்கும். - படம்: இந்திய மரபுடைமை நிலையம்

மொத்தம் நான்கு நாள்களுக்குக் கலாசார நிகழ்ச்சிகள், சிறார்க்கான நடவடிக்கைகள், விளையாட்டுகள் என இந்திய மரபுடைமை நிலையம் தை மாதக் குதூகலத்தில் திளைத்திருக்கும்.

இலவசத் தின்பண்டங்கள் வழங்கப்படும்.
இலவசத் தின்பண்டங்கள் வழங்கப்படும். - படம்: இந்திய மரபுடைமை நிலையம்

அதுமட்டுமன்றி எல்லாரும் பங்கேற்க கால்நடை பொம்மை உருவாக்குதல், பொங்கல் சாவிக்கொத்து, வண்ணம் தீட்டுதல் போன்ற இதர கைவினைப் பொருள் சார்ந்த நடவடிக்கைகளும் இடம்பெறும். இலவசமாகத் தின்பண்டங்கள் வழங்கப்படும்.

2026ஆம் ஆண்டு இந்திய மரபுடைமை நிலையப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://ihc-programmes.peatix.com/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்