கோடரியால் பெண்ணைத் தாக்கிய ஆடவர்மீது கொலைமுயற்சி குற்றச்சாட்டு

கோடரியால் பெண்ணைத் தாக்கிய ஆடவர்மீது கொலைமுயற்சி குற்றச்சாட்டு

படம்: ஷின் மின்

13 Feb 2026 - 2:05 pm

1 mins read

தமக்கு நன்கு அறிமுகமான பெண் ஒருவரைக் கோடரியால் தாக்கிய இந்திய நாட்டு ஆடவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

பன்னீர்செல்வம் ஐயப்பன், 30, என்னும் அந்த ஆடவர் இந்தோனீசியாவைச் சேர்ந்த திருவாட்டி ஃபாஜார் நூர் ஐனி, 30, என்னும் பெண்ணின் தலை, கழுத்து மற்றும் கைகளில் கோடரியால் வெட்டியதாகக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் 11 சிம்ஸ் வியூவில் உள்ள தரை வீட்டில் பிப்ரவரி 11ஆம் தேதி காலை 7.05 மணியளவில் நிகழ்ந்தது.

காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எதற்காக அந்தப் பெண்ணை பன்னீர்செல்வம் கோடரியால் தாக்கினார் என்ற விவரம் நீதிமன்ற ஆவணங்களில் இல்லை.

காவல்துறை முழுமையாக விசாரணை நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக அவரை ஒரு வார காலம் விசாரணைக் காவலில் வைக்க காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரினார்.

அந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 20ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

கொலைமுயற்சிக் குற்றம் நிரூபிக்கப்படும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டு சிறை, அபராதம், பிரம்படி ஆகியன விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்