தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் மருத்துவக் காப்புறுதித் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, $12,000க்கும் அதிகமான தொகையைப் பெற போலி ரசீதுகள் தயாரித்து மோசடிக் குற்றத்தில் ஈடுபட்ட இந்திய நாட்டவருக்கு வியாழக்கிழமையன்று (ஜூன் 4) 20 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
டெமெனோஸ் சிங்கப்பூர் என்ற மென்பொருள் நிறுவனத்தில் முதன்மை ஆலோசகராகப் பணியாற்றி வந்த 51 வயது பூத்ரா ரவி நிறுவனத்தின் காப்புறுதி விதிமுறைகளின்படி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கான மருத்துவச் செலவுகளுக்கு ஏஐஏ காப்புறுதி நிறுவனத்திடமிருந்து பணம் திரும்பப் பெறலாம்.
ஆனால், இச்சலுகையைத் தவறாகப் பயன்படுத்திய பூத்ரா ரவி, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், தமக்கு மருத்துவச் செலவுகள் எதுவும் ஏற்படாத நிலையிலும் கணினி மென்பொருள் மூலம் போலி மருத்துவ ரசீதுகளைத் தயாரித்தார்.
பல் மருத்துவம் மற்றும் கண் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகக் காட்டி, 57 முறை அவர் சமர்ப்பித்த போலி ரசீதுகளை உண்மை என்று நம்பி ஏஐஏ நிறுவனம் $12,349.88 தொகையை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியது.
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த மோசடி, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரசீதுகளில் இருந்த முரண்பாடுகளைக் காப்புறுதி நிறுவனப் பிரதிநிதி கண்டறிந்ததை அடுத்து வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பூத்ரா ரவி தாம் ஏமாற்றிய முழுத் தொகையையும் காப்புறுதி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார். நீதிமன்றத்தில் தம்மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

