தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல் மனைவிக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்த இந்திய நாட்டவருக்குச் சிறை

3 mins read
முதல் மனைவி பணிபுரிந்த மருத்துவமனையில் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்தபோது சிக்கினார்
05832894-1808-4f5f-a0ae-4c874b93badd
இந்திய நாட்டவரான 49 வயது வைத்தியலிங்கம் முத்துக்குமார், முதல் மனைவியை 2007லும் இரண்டாவது மனைவியை 2022லும் மணந்தார். - படம்: பிக்சாபே

திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆடவர் ஒருவர் தம்மைவிட வயது குறைவாக உள்ள சக ஊழியரை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். இந்த இருதுணை மணம் (bigamy) சட்டப்படி குற்றமாகும்.

தம்முடைய முதல் மனைவி பணிபுரிந்த மருத்துவமனையில் இரண்டாவது மனைவிக்குக் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, அவரைப் பார்க்கச் சென்றபோது அந்த ஆடவர் சிக்கினார்.

இந்திய நாட்டவரான 49 வயது வைத்தியலிங்கம் முத்துக்குமாருக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) மூன்று மாத, மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தம்முடைய இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து ரகசியத் திருமணம் செய்த குற்றத்தையும் நிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தில் தமக்கு வேறு திருமணம் இல்லை என்று தவறான தகவலை அளித்த குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், வருகை அனுமதி (Visit Pass) விண்ணப்பத்தில் தமக்கு வேறு திருமணம் இல்லை என்று தவறாகக் கூறிய மூன்றாவது குற்றச்சாட்டும் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவலின்படி, தற்போது 55 வயது சிங்கப்பூரரான தம் முதல் மனைவியை முத்துக்குமார் 2007ல் இந்தியாவில் திருமணம் செய்தார்.

தம் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்காக 2011ல் முத்துக்குமார் சிங்கப்பூருக்கு வந்து இங்கு வேலை செய்யத் தொடங்கினார். வேலையில், சக ஊழியரான சல்மா பீ அப்துல் ரசாக் என்பவரை முத்துக்குமார் சந்தித்தார். சிங்கப்பூரரான சல்மாவுக்கு இப்போது 43 வயது.

பின்னர், சல்மாவுடன் முத்துக்குமார் காதல் உறவில் ஈடுபடத் தொடங்கினார். வைத்தியலிங்கம் ஏற்கெனவே திருமணமானவர் என்பது சல்மாவுக்குத் தெரிந்திருந்தது.

2022 ஜூன் மாதம், முத்துக்குமாரும் சல்மாவும் திருமணம் செய்துகொள்ள சதி செய்தனர். தமக்குக் குழந்தை வேண்டும் என முத்துக்குமார் விரும்பியதால், சல்மாவைத் திருமணம் செய்துகொள்வதற்கான யோசனையை முன்வைத்தார். சல்மாவை மணந்த பிறகு, முதல் மனைவியை மணமுறிவு செய்வதாக சல்மாவுக்கு முத்துக்குமார் உறுதியளித்தார்.

2022 ஆகஸ்ட்டில் முத்துக்குமாரும் சல்மாவும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். தமிழகத்தின் நாகூரில் சமயத் தலைவர் ஒருவரால் இந்தத் திருமணம் பதிவுசெய்யப்பட்டது. இந்தத் திருமணம் தொடர்ந்து செல்லுபடியாகிறது என்றும் அது ரத்து செய்யப்படவில்லை என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

அவர்கள் திருமணம் செய்துகொண்டபோது, முத்துக்குமாரின் முதல் மனைவி உயிருடன் இருக்கிறார் என்பதும் அவரது முதல் திருமணம் செல்லுபடியாகிறது என்பதும் இருவருக்கும் தெரிந்திருந்தது.

முத்துக்குமாரும் சல்மாவும் சிங்கப்பூருக்குத் திரும்பிய பிறகு, முத்துக்குமார் தம் முதல் மனைவியுடன் தொடர்ந்து வசித்து வந்தார். ஆனால், சல்மாவை அவர் தொடர்ந்து சந்தித்து வந்தார்.

2023 செப்டம்பர் 14ஆம் தேதி, சல்மா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு முத்துக்குமார்தான் தந்தை.

தம் முதல் மனைவி வேலை செய்த கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு சல்மாவைப் பார்க்க அவர் சென்றார்.

அப்போது, மருத்துவமனையின் பிரசவப் பிரிவிலிருந்து முத்துக்குமார் வெளியே வருவதை அவரின் முதல் மனைவி பார்த்தார். அப்பிரிவு, பார்வையாளர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படாத பகுதி என்பது அவருக்குத் தெரியும்.

தம் கணவரிடம் இதுபற்றி விசாரித்து அவரை எதிர்கொண்டபோது, முத்துக்குமார் தமது இரண்டாவது திருமணம் பற்றியும் குழந்தை பிறந்தது பற்றியும் கூறிவிட்டார்.

2024 ஜூன் 12ஆம் தேதி, சிங்கப்பூரர் ஒருவரின் துணைவியார் என்ற முறையில், முத்துக்குமார் தமது நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பிக்க குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தார்.

இதற்கு அவரின் முதல் மனைவி உள்ளூர் ஆதரவாளராக இருந்தார். அந்த விண்ணப்பத்தில், தமக்கு வேறு திருமணம் எதுவும் இல்லை என்று முத்துக்குமார் தவறாகக் குறிப்பிட்டார்.

2024 அக்டோபரில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இரண்டாவது மனைவி புகார்

2024 ஜூலையில், முத்துக்குமார் ஏற்கெனவே இன்னொரு பெண்ணுடன் திருமணமாகி இருந்தபோதே, தன்னையும் அவர் திருமணம் செய்துகொண்டதாக மனிதவள அமைச்சுக்கு சல்மா தெரியப்படுத்தினார்.

முத்துக்குமாருக்கு அவருடைய முதல் மனைவியின் உதவியால் நீண்டகால வருகை அனுமதி (Long-Term Visit Pass) வழங்கப்பட்டதால், இந்த வழக்கு குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பிறகு, ரகசியத் திருமணம் குறித்த குற்றத்திற்காக இந்த வழக்கு காவல்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

குறிப்புச் சொற்கள்