இந்தியக் கடற்படையைச் சேர்ந்த மூன்று கப்பல்களின் அண்மைய வருகை, சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்காப்பு உறவுகளை வலுப்படுத்தியதுடன் இரு நாட்டுக் குடிமக்களுக்கு இடையிலான பிணைப்புகளையும் மேம்படுத்தியுள்ளது.
ஐஎன்எஸ் சுஜாதா, ஐஎன்எஸ் ஷார்துல், ஐசிஜிஎஸ் வீரா ஆகியவை அந்தக் கப்பல்கள்.
தென்கிழக்காசியாவில் மேற்கொள்ளப்படும் நீண்ட தொலைவுப் பயிற்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக அவை சாங்கி கடற்படைத் தளத்தில் மூன்று நாள்கள் அணைந்திருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7), சொங் பாங்கில் உள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் தங்கியிருக்கும் 300 பேர், இல்ல ஊழியர்கள் அனைவருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் சமையற்கலைஞர்கள் உணவு தயாரித்தனர். மிகுந்த கவனத்துடன் சைவ உணவை அவர்கள் தயாரித்ததாகக் கூறப்பட்டது.
இந்தியக் கடற்படையின் முதல் பயிற்சிப் பிரிவு (1TS) அதிகாரிகள், தாதிமை இல்லத்தைச் சேர்ந்தோருக்கு அதை விநியோகித்தனர்.
சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தற்காப்பு விவகாரங்களுக்குச் சிறப்புப் பொறுப்பேற்றுள்ள கேப்டன் சைகத் சாட்டர்ஜி இந்த முயற்சிக்குத் தலைமை தாங்கினார்.
சமூகத்துக்குத் திருப்பித் தருவதில் இந்தியக் கடற்படையின் கடப்பாட்டை மேம்படுத்துவது இதன் நோக்கம் என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் கூறினார்.
ஸ்ரீ நாராயண மிஷனின் நடவடிக்கைகள் குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.தேவேந்திரன் இந்தியக் கடற்படையினருக்கு விளக்கிக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியக் கடற்படை அதிகாரிகள், தாதிமை இல்லத்தின் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள குழுவினரிடம் கலந்துரையாடினர்.
திரு தேவேந்திரன் இந்நடவடிக்கை தொடர்பில் இந்தியக் கடற்படைக்கும் சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“தனிப்பட்ட முறையில் இந்த நடவடிக்கை எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நான், இந்தியாவின் தேசியத் தற்காப்புக் கல்விக்கழகத்தின் முன்னாள் வெளிநாட்டு மாணவர். இந்தியக் கடற்படையின் தற்போதைய தலைவரான அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி என்னுடன் பயின்றவர்,” என்றார் அவர்.
இந்தியக் கடற்படைக் கப்பல்களின் சிங்கப்பூர் வருகை, இரு நாட்டுக் கடல்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஆழமான புரிதலைப் பேணுவதிலும் முக்கியமான படியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

