இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைப் பிரதிபலித்தது

ஸ்ரீ நாராயண மிஷன் மூத்தோருக்கு உணவளித்த இந்தியக் கடற்படை வீரர்கள்

3 mins read
cb3b6be0-193c-4bd6-bb31-9af8e428f250
ஸ்ரீ நாராயண மிஷன் மூத்தோருடன் உரையாடும் இந்தியக் கடற்படை வீரரான லெப்டினென்ட் ரா நி‌‌‌ஷாந்த். - படம்: த. கவி

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் நீட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தியக் கடற்படையின் சார்பில் மூத்தோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்ட நெடிய வரலாற்றுப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வண்ணம் அமைந்த இந்நிகழ்ச்சி ஈசூனில் உள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) அன்று நடைபெற்றது.

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகமும், ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில், ஏறத்தாழ பத்து இந்தியக் கடற்படை வீரர்கள் தங்கள் கப்பலில் சமைத்த உணவுகளை இல்லத்தில் உள்ள மூத்தோருக்கு வழங்கினர். தொடர்ந்து, அவர்களுடன் பேசிச் சிரித்து, சில நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

மூத்தோருக்கு உணவளிக்க வந்த வீரர்களுக்கு நன்றி நவிலும் ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ் தேவேந்திரன்.
மூத்தோருக்கு உணவளிக்க வந்த வீரர்களுக்கு நன்றி நவிலும் ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ் தேவேந்திரன். - படம்: த கவி

“நாராயண மிஷனின் வரலாற்றுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உண்டு. ஒரு சிங்கப்பூர் ராணுவ வீரராக, எனக்கும் இந்திய ராணுவ, கடற்படைகளுக்கும் நல்ல நட்புறவு உண்டு. இவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததில் பெருமை,” என்றார் நாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ் தேவேந்திரன்.

இவ்வமைப்பு தொடங்கப்பட்ட 1940களின் காலகட்டத்தில் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் வலுவான பிணைப்பு இருந்திருக்கலாம். தற்போதுள்ள சிங்கப்பூரர்கள் இந்திய வேர்களிடமிருந்து சற்றே தள்ளி வந்துவிட்ட நிலையில் அத்தொடர்பைப் பாதுகாக்க இவ்வகை முன்னெடுப்புகள் வழிவகுக்கும் என நம்புவதாகச் சொன்னார் அவர்.

“ஒரு தேசத்தின் இறையாண்மையையும் நலன்களையும் பாதுகாக்க ஆயுதமேந்திய தொழில் அவசியமானதாகும். அது உன்னதமானதும் ஆகும். ஆனாலும் அத்துறையில் உள்ளவர்கள் உட்பட யாருமே போர் அல்லது சச்சரவுகளை விரும்புவதில்லை. பாதுகாப்புத் துறையில் செயல்படும் அதிகாரிகள் சமூக சேவையில் ஈடுபடுவது, அவர்களைப் பரபரப்பான சூழலிலிருந்து விடுபட உதவும். மனித நேயத்துடன் கூடிய பிணைப்பின் மூலம் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனநிறைவான சூழலுக்கும் வழிவகுக்கும்,” என்றார் திரு தேவேந்திரன்.

உணவை விநியோகித்ததோடு மூத்தோருக்கு அருகிலிருந்து உணவருந்த உதவி செய்த கடற்படை வீரர்கள்.
உணவை விநியோகித்ததோடு மூத்தோருக்கு அருகிலிருந்து உணவருந்த உதவி செய்த கடற்படை வீரர்கள். - படம்: த கவி

இந்தியாவின் எதிர்காலக் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் முதலாவது ‘ஸ்குவாட்ரன்’ அணியினர் இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டதாகச் சொன்னார் லெப்டினென்ட் ரா நிஷாந்த், 27.

வீரர்களுக்கான பயிற்சியில் சமூகப்பணியும் அடங்கும். அந்தவகையில் மூத்தோருக்கு உணவளித்தோம்,” என்றார் அவர்.

மொத்தம் 224 மூத்தோருக்கு வழங்க 300 உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்தனர் அவ்வீரர்கள்.

இந்தியப் பாரம்பரிய சுவையில் அமைந்த உணவு மொத்தமும் கப்பலில் வைத்தே தயாரிக்கப்பட்டதைச் சுட்டினார் நிஷாந்த்.

தொடர்ந்து, “மூத்தோருக்காகத் தயார் செய்ததால் காரம், மசாலா சுவையைக் குறைத்துக் கொண்டோம். இந்திய உணவின் முக்கிய அங்கமான பாயாசமும் வழங்கியுள்ளோம். இது உணவுப் பகிர்தலைத் தாண்டி உணர்வுப் பகிர்வாகவே அமைந்தது,” என்று புன்னகையுடன் கூறினார்.

மேலும், மூத்தோர் தங்களைச் சீருடையில் பார்த்து வியந்ததும், தங்கள் பணிகுறித்து தெரிந்து கொண்டதும் பெருமையளிப்பதாகச் சொன்னார் நிஷாந்த்.

“உணவு சுவையாக இருந்தது. இந்தியாவிலிருந்து வந்துள்ள அதிகாரிகள் கனிவுடன் பரிமாறியதுடன், அன்பாகப் பேசினர். மகிழ்ச்சியான அனுபவம் இது,” என்றார் இல்லவாசியான சூரியகுமார், 87.

மூத்தோருடன் உரையாடும் இந்தியக் கடற்படை வீரரான லெப்டினென்ட் கமாண்டர் தவிந்தர் சிங்.
மூத்தோருடன் உரையாடும் இந்தியக் கடற்படை வீரரான லெப்டினென்ட் கமாண்டர் தவிந்தர் சிங். - படம்: த கவி

தாம் சிறு வயதில் இந்தியாவிலிருந்து வந்ததாகவும், தற்போது இந்தியாவிலிருந்து வந்துள்ள அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதில் கூடுதல் மகிழ்ச்சியென்றும் குறிப்பிட்டார் மற்றோர் இல்லவாசியான ராஜம்மா, 95.

குறிப்புச் சொற்கள்