சிங்கப்பூரில் இந்தியப் பகுதி மின்கடத்தி நிறுவனத்தின் புதிய செயல்பாட்டு மையம்

சிங்கப்பூரில் இந்தியப் பகுதி மின்கடத்தி நிறுவனத்தின் புதிய செயல்பாட்டு மையம்

படம்: லாவண்யா வீரராகவன்

09 Jun 2026 - 8:17 pm

2 mins read

இந்தியாவைச் சேர்ந்த பகுதி மின்கடத்தி, மின்னணுவியல் நிறுவனமான ‘ஏஇஐஎம்’, சிங்கப்பூரில் அதன் செயல்பாடுகளுக்கான வசதியைத் திறந்துள்ளது.

ஐந்து நாடுகளில் செயல்படும் பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Polymatech Electronics Limited) நிறுவனத்தின் துணை நிறுவனம் அது. அதன் ‘பேக்கேஜிங்’ வசதி தற்போது முழுவதுமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பகுதி மின்கடத்தித் துறையில் கவனம் செலுத்தும் நிலையில், சிங்கப்பூரில் ‘ரேம்’ (கணினி, திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் ‘சில்லு’) ‘பேக்கேஜிங்’ வசதியையும் அது நிறுவியுள்ளது.

மேப்பிள்ட்ரீ ஹை-டெக் பூங்காவில், ஒளிவிளக்கின்றி, மனிதவளம் இன்றிச் செயல்படும் தானியங்கி வசதி.
மேப்பிள்ட்ரீ ஹை-டெக் பூங்காவில், ஒளிவிளக்கின்றி, மனிதவளம் இன்றிச் செயல்படும் தானியங்கி வசதி. - படம்: லாவண்யா வீரராகவன்

‘எல்இடி சிப்-ஆன்-போர்டு’க்கான இந்த ‘பேக்கேஜிங்’ வசதி கிட்டத்தட்ட $32 மில்லியன் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இது, அடுத்த 18 மாதங்களில் சிங்கப்பூரில் குறைந்தது 50 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மையம், ஒளிவிளக்கின்றி, மனிதவளம் இன்றிச் செயல்படும் தானியங்கி மையமாகும்.

மேப்பிள்ட்ரீ ஹை-டெக் பூங்காவில் அமைந்துள்ள இந்த மையம், செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்டது.

இதில், சிங்கப்பூர்ப் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவர் இங் மிங் லியாங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கழகப் பிரதிநிதிகள், சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப, தொழில்துறைப் பங்காளிகள், சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தி, மேம்பட்ட உற்பத்திக் கட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய வசதியின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் (இடமிருந்து) நிறுவனத்தின் தலைமைச் செயலாக்க அதிகாரி எட்வின் லோ, சிங்கப்பூர்ப் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவர் இங் மிங் லியாங், நிறுவனத்தின் இயக்குநர் வி‌‌‌ஷால் நந்தம், நிர்வாக இயக்குநர் ஈஸ்வர் ராவ் நந்தம்.
புதிய வசதியின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் (இடமிருந்து) நிறுவனத்தின் தலைமைச் செயலாக்க அதிகாரி எட்வின் லோ, சிங்கப்பூர்ப் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவர் இங் மிங் லியாங், நிறுவனத்தின் இயக்குநர் வி‌‌‌ஷால் நந்தம், நிர்வாக இயக்குநர் ஈஸ்வர் ராவ் நந்தம். - படம்: லாவண்யா வீரராகவன்

‘இந்தியாவிலிருந்து உலகிற்கு: சிங்கப்பூர் வழியே’ எனும் கருத்தை மையமாகக் கொண்டு தங்கள் நிறுவனம் சிங்கப்பூரில் விரிவடைந்துள்ளதாகக் கூறினார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வர் ராவ் நந்தம்.

“சிங்கப்பூரில் பகுதி மின்கடத்தித் துறைக்கான கட்டமைப்பு நன்றாக உள்ளது. உலக அரங்கில் சிங்கப்பூரின் மதிப்பு சிறப்பானது. குறிப்பாக, பகுதி மின்கடத்தித் துறை விரிவடையும் வேளையில், சிங்கப்பூரில் இந்த வசதியைத் தொடங்க இது சரியான தருணமாக அமைந்துள்ளது,” என்றார் அவர்.

இந்த வசதியைத் தொடங்கத் திட்டமிட்டபோது இந்தியா - சிங்கப்பூர் இடையேயான செயல்முறை மிகச் சுமுகமாக அமைந்ததைச் சுட்டிய அவர், “ஏற்றுமதி இறக்குமதிச் செயல்முறைகள் சிங்கப்பூரில் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது,” என்றார்.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் எங்கள் முதலீடுகளை அதிகரிப்போம். தொடந்து, இங்கு உற்பத்தியாகும் சில்லுகள் இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்படும். இது இரு நாடுகளிலும் இந்தத் துறைக்குப் பங்களிக்கும் என்றும் அவர் சொன்னார்.

செய்தியாளர்களுக்கும், பேராளர்களுக்கும் இந்த மையத்தைச் சுற்றிக்காட்டிய நிறுவன இயக்குநர் வி‌‌‌ஷால் நந்தம், அங்குள்ள கருவிகளின் செயல்பாட்டை விளக்கினார். தொடர்ந்து, மருத்துவம், வேளாண்மை எனப் பல்வேறு துறைகளில் தங்கள் சில்லுகள் பயன்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்
பகுதி மின்கடத்திகுறைகடத்திதொழில்நுட்பம்உற்பத்திஏற்றுமதிஇறக்குமதி