இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் சந்தாயக்’ எனும் கப்பல் சிங்கப்பூரின் தேசிய தினத்தன்று (ஆகஸ்ட் 9) இங்கு வந்தடைந்தது. கடற்புறச் சூழலைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்ட அந்த அதிநவீனக் கப்பல் மூன்று நாள்கள் இங்கிருக்கும். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட அத்தகைய ஆற்றல் பெற்ற முதல் கப்பல் ‘சந்தாயக்’.
வட்டாரக் கடல்துறை ஒத்துழைப்பில் இந்தியா கொண்டுள்ள கடப்பாட்டைக் கப்பலின் வருகை மறுவுறுதிப்படுத்துகிறது. இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் இலக்கில் அது முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.
கடல்துறை சார்ந்த அரசதந்திர நடவடிக்கைகளில் இந்தியாவின் தலைமைத்துவம் முன்னேறி வருவதைக் கப்பலின் வருகை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் ‘பிஐபி’ செய்தித் தொகுப்பில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
‘ஐஎன்எஸ் சந்தாயக்’ கப்பலுக்கான பணி 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. முழு அளவிலான கடலோர, ஆழ்கடல் கண்காணிப்பு ஆற்றல்களை அது கொண்டுள்ளது. கப்பலின் மேல்தளத்தில் ஹெலிகாப்டரின் துணையோடு மனிதாபிமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். கப்பலில் மருத்துவமனை வசதிகளும் உள்ளன.
இரு நாடுகளின் கடற்படையினருக்கும் இடையில் தொழில்நுட்ப, நிபுணத்துவப் பரிமாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதும் கப்பல் இங்கு வந்ததற்கான நோக்கங்களில் அடங்கும். இரு தரப்பும் கடற்புறச் சூழலில் தொடர்ந்து இணைந்து செயல்படும் வழிவகைகளும் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.